கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

அ.தி.மு.க.,வில்
40 பேர் ஐக்கியம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த மாற்று கட்சியினர், 40 பேர், பிரேம்குமார், சேதுபதி ஆகியோர் தலைமையில், அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., முன்னிலையில் தங்களை, அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் பையூர் ரவி மற்றும் பலர் உடனிருந்தனர்.


காரப்பட்டில் ரத்த தான முகாம்ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த, காரப்பட்டு
யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நேசம் தொண்டு நிறுவனம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து, 76வது குடியரசு தினம், விவேகானந்தரின், 163வது ஜெயந்தி விழா மற்றும் உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி ரத்த தான முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழாவை நேற்று
நடத்தின.
இதில், ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் தேவராசு, தாய்மார்கள் பிரசவ காலத்தில் ரத்தம் பெறும் அவசியத்தையும், குருதி கொடையின் சிறப்புகளையும் பேசினார். நேசம் தொண்டு நிறுவனர் குணசேகரன்,
மருத்துவ அலுவலர் அபிநயா, யுனிக்
கல்லுாரியின் முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் அருள் ஆகியோர், ரத்தத்தின் தேவைகள் குறித்து பேசினர்.
கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் குபேந்திரன் வரவேற்றார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் மோகனா நன்றி கூறினார். இதில், 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் குருதி கொடை வழங்கினர். கல்லுாரி வளாகத்தில், 76 மரக்கன்றுகள் நடப்பட்டன.


நடைபயிற்சி சென்றவர்ரயில் மோதி உயிரிழப்பு
ஊத்தங்கரை-
ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷன் வழியாக, டில்லி, மும்பை, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளம், போன்ற பகுதியில் இருந்து ஏராளமான விரைவு ரயில்களும், சரக்கு வண்டிகளும் வந்து செல்கின்றன.
சாமல்பட்டியை சேர்ந்த தானிய மண்டி உரிமையாளர் ஜெகதீசன், 65, வழக்கம் போல் நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள பிளாட்பாரத்தில் நடைபயிற்சி சென்றபோது, ரயில்வே பாதையை கடந்துள்ளார்.
அப்போது, ஜோலார்பேட்டையிலிருந்து சேலம் வழியாக சென்ற விரைவு ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். சேலம் கோட்ட ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.



சாலை விபத்தில் மூதாட்டி பலிகிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த சொன்னாலம்பட்டியை சேர்ந்த மூதாட்டி துளசியம்மாள், 70. இவர் நேற்று முன்தினம் மதியம் ஊத்தங்கரை அருகே சேலம் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


மாணவி உட்பட இருவர் மாயம்கிருஷ்ணகிரி-
திருப்பத்துார் மாவட்டம், புதுார்நாடு கிராமத்தை சேர்ந்தவர் நதியா, 20. பர்கூர் அரசு கலைக் கல்லுாரியில் மூன்றாமாண்டு மாணவி. கடந்த, 3ல் கல்லுாரிக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
மாணவியின் பெற்றோர் பர்கூர் போலீசில் புகாரளித்தனர். அதில், புதுார்நாடு பகுதியை சேர்ந்த ராஜலிங்கம், 24 என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
* தேன்கனிக்கோட்டை அருகே கலகோபசந்திரத்தை சேர்ந்தவர் ராமசாமி, 62. கடந்த மாதம், 25 இரவு, 8:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.
அவரது மகன் நல்லுசாமி, 36, புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் தேடி
வருகின்றனர்.

Advertisement