சிதம்பரம் மருத்துவ கல்லுாரிக்கு 93 டாக்டர்கள் நியமனம்; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
சிதம்பரம்; சிதம்பரத்தில் உள்ள மாவட்ட மருத்துவக் கல்லுாரிக்கு புதியதாக 93 டாக்டர்கள் நியமிக்க கவுன்சிலிங் நடந்து வருகிறது என, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சிதம்பரம் நகராட்சியில், 143 கோடி ரூபாயில் நடைபெற்று வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை நேற்று மாலை வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
பின்னர், நகராட்சி அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அமைச்சர் கூறியதாவது:
ரூ. 250 கோடியில் சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் நடக்கிறது. சிதம்பரம் நகராட்சியில் 65 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.
பணிகள் முடிந்ததும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும். சாலைகளும் தரமானதாக போடப்பட உள்ளது.
சிதம்பரத்தில் உள்ள மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை என, புகார் வந்தது.
இந்த மருத்துவமனைக்கு 93 புதிய டாக்டர்கள் நியமிக்க ஆணை வழங்கப்பட்டு கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. 83 டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சிதம்பரத்தில் நடைபாதையுடன் குளங்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நகராட்சி கமிஷனர் மல்லிகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.