சர்வீஸ் சாலை அமைக்க சிலைகள் அகற்றம்

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் வடக்கு பைபாஸ் முனையில் சர்வீஸ் சாலை அமைக்க இடையூறாக இருந்த அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மற்றும் கொடி கம்பங்களை 'நகாய்' அதிகாரிகள் அகற்றினர்.

விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனையில் மேம்பாலம் அமைக்க சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படுகிறது.

வடக்கு பைபாஸ் பகுதியில் சர்வீஸ் சாலையை இணைக்க அங்கிருந்த அண்ணாதுரை, பெரியார் சிலைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் தடையாக உள்ளது குறித்து தினமலர் நாளிதழில் கடந்த 1ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நகாய் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தினர். கட்சியினர் சிலைகளை அகற்ற சம்மதம் தெரிவித்தனர் .

நேற்று பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் ,துணை சேர்மன் பாலாஜி, நகாய் பொறியாளர் செல்வராஜ், ஆலோசகர் பிரபாகரன் மற்றும் கட்சியினர் முன்னிலையில் வடக்கு பைபாஸ் முனையிலிருந்த அண்ணாதுரை , பெரியார் சிலைகளை ஜே.சி.பி.,மற்றும் கிரேன் உதவியுடன் அகற்றினர் .

வரும் வாரங்களில் சர்வீஸ் சாலைகள் இணைக்கும் பணி முடிந்து, விரைந்து மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கவுள்ளதாக நகாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement