பனாமா கால்வாய் விவகாரம்; மிரட்டலுக்கு பணிந்தது பனாமா!

5


வாஷிங்டன்: பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என்று அதிபர் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு பனாமா நாடு பணிந்தது.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அமைந்துள்ளது பனாமா கால்வாய். கரீபியன் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் வகையில், 82 கி.மீ., துாரத்துக்கு அமைந்துள்ளது இந்த கால்வாய். உலகின் கடல்சார் வணிகத்தில், 5 சதவீதமும், அமெரிக்காவின் வர்த்தகத்தில், 50 சதவீதமும், இந்த கால்வாய் வழியாகவே நடக்கின்றன. உலகின் முக்கிய கடல்சார் வணிகத்துக்கான இணைப்பாக இந்த கால்வாய் உள்ளது. அமெரிக்காவால் வெட்டப்பட்ட இந்த கால்வாய், நீண்ட காலம் அமெரிக்காவால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது.



கடந்த, 1977ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த கால்வாயை நிர்வகிக்கும் உரிமையை 1999ல் பனாமாவுக்கு அமெரிக்கா வழங்கியது. ஒவ்வொரு ஆண்டும் 14 ஆயிரம் கப்பல்கள் இந்த பனாமா கால்வாய் வழியாகச் செல்கின்றன. அமெரிக்காவின் கப்பல்களில் சுமார் 75 சதவீதம், பனாமா கால்வாய் வழியாகதான் சென்று வருகின்றன. இதற்காக பனாமா பெரும் கட்டணத்தை அமெரிக்காவிடம் வசூலிக்கிறது; அமெரிக்க கடற்படை கப்பல்கள் இடம் கூட கட்டணம் வசூலிக்கின்றனர் என்பது தான் டொனால்டு டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது.

அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டது இந்த கால்வாய் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என்றும் அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, பனாமா சென்று அந்த நாட்டு அரசுடன் பேச்சு நடத்தினார். இதன் விளைவாக, பனாமா நாடு பணிந்தது. இனி அமெரிக்க அரசு கப்பல்கள் அனைத்தும் கட்டணம் இன்றி கால்வாய் வழியாக செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement