ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்

6

வாஷிங்டன்: ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.


அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர், சமீபத்தில் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி வரியை விதித்து வருகிறார். இந்த சூழலில் தற்போது ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக, டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், இந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவி நிறுத்தப்படுகிறது.


மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படுபவரை ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு பாதுகாத்து வருகிறது. யுனெஸ்கோ அமைப்பும் தொடர்ந்து யூத விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது என கூறி, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடந்த 2019ம் ஆண்டு ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகின. அப்போது அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்தார். பின்னர், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, மனித உரிமைகள் கவுன்சிலியில் கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்காவை மீண்டும் இணைத்தார்.



இந்த சூழலில் தற்போது அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தற்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் டிரம்ப் இறங்கி உள்ளார். அந்த வகையில், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் முடிவை டிரம்ப் எடுத்துள்ளார்.

Advertisement