அரசியலுக்காக கல்வி சீர்திருத்தங்களை எதிர்ப்பதா: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
புதுடில்லி: ''அரசியல் கதைகளை தக்க வைப்பதற்காக, முற்போக்கான கல்வி சீர்திருத்தங்களை அச்சுறுத்தல்களாகத் திசை திருப்புகிறார்,'' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார்.
துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிக அதிகாரம் வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பான புதிய வரைவு விதிகளை பல்கலை மானியக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த வரைவு அறிக்கையை கண்டித்து டில்லியில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ராகுல் உள்ளிட்ட சில அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் காலாவதியான அரசியல் கட்டுக்கதைகளை தக்க வைத்துக் கொள்வதற்காக முற்போக்கான கல்வி சீர்திருத்தங்களை அச்சுறுத்தல்கள்களாகத் திருப்புவது துரதிர்ஷ்டவசமானது; கவலைக்குரியது.
யு.ஜி.சி., வரைவு விதிமுறைகள் எல்லைகளை சுருக்கவில்லை. விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டு உள்ளது. அவை குரல்களை அடக்குவதை விட அதிக குரல்களை உள்ளடக்குவதை நோக்கமாக கொண்டுள்ளன. அவை கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியையும், மொழியியல் பன்முகத்தன்மையையும் நிலைநிறுத்துகின்றன.
வரைவு மசோதா கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துகின்றன. பலவீனப்படுத்தவில்லை. ஆனால், யதார்த்தத்தை விட சொல்லாட்சியை விரும்புவோருக்கு இந்த உண்மைகள் மிகவும் சிரமமாக இருக்கும்.
எதிர்ப்பதற்காக ஒன்றை எதிர்ப்பது நாகரிகமாக இருக்கலாம். அது ஒரு அற்பமான அரசியல். ராகுலும், தங்களைத் தாங்களே அரசியலமைப்பின் சாம்பியன்கள் என அழைத்துக் கொள்பவர்கள், தங்கள் ஒத்திகை அரசியலை துவங்குவதற்கு முன்னர், வரைவு விதிமுறைகளை உண்மையில் படிப்பதற்கு சிறிது நேர அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.
அவகாசம் நீட்டிப்பு
இந்நிலையில் இந்த வரைவு விதிகள் மீது கருத்துச் சொல்ல நேற்று (பிப்.,05) வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து யு.ஜி.சி., வரைவு விதிகள் மீது கருத்துச் சொல்வதற்கான அவகாசத்தை பிப்.,28 வரை யு.ஜி.சி., நீட்டித்து உள்ளது.