கள ஆய்வுக்குழுவினர் கட்சி தலைமையிடம் அறிக்கை அளிப்பு நடவடிக்கையை எதிர்பார்த்து கட்சியினர் காத்திருப்பு

கள ஆய்வுக்கு சென்ற நிர்வாகிகள் அளித்த அறிக்கை அடிப்படையில், விரைவில் கட்சியில் சில மாற்றங்களை செய்ய, பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க., தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் நீக்கம், அதற்கு எதிரான சட்டப் போராட்டம் என, கட்சி தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில், பலமான கூட்டணி அமையாதது, ஓட்டு சதவீதம் சரிவை சந்தித்தது, கட்சியினரிடம் சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

இதை சரி செய்து, கட்சியை பலப்படுத்தி, 2026 சட்டசபை தேர்தலுக்கு, கட்சியை தயார் செய்ய வேண்டிய கட்டாயம், கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

கட்சியில் மாவட்ட செயலர்கள், தங்களை யாரும் மாற்ற முடியாது என்ற எண்ணத்தில், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவிகளை அளிப்பதுடன், மற்றவர்களை ஒதுக்குவதாக, பல மாவட்டங்களில் புகார்கள் எழுந்து, அவை கட்சித் தலைமைக்கும் வந்து சேர்ந்தன. எனவே, கட்சியினரின் செயல்பாடுகள் குறித்து, நேரடியாக கள ஆய்வு செய்து, கட்சி தலைமைக்கு அறிக்கை அளிக்க, 10 பேர் கொண்ட குழுவை, பொதுச்செயலர் பழனிசாமி கடந்த நவ. 11ல் அறிவித்தார்.

இக்குழுவில், கட்சி துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, வேலுமணி, வரகூர் அருணாசலம், ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, கட்சி நிர்வாகிகள் பலரையும் சந்தித்து பேசினர். பல மாவட்டங்களில், கள ஆய்வுக்கு வந்த, முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில், நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. மாவட்டச் செயலர்கள் குறித்து புகார் தெரிவித்த நிர்வாகிகளை, மாவட்டச் செயலர்களின் ஆதரவாளர்கள் தாக்க, பல இடங்களில், கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

சென்னை மாவட்டத்தில், கடந்த 4ல் கள ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திலும், கட்சியினர் பல்வேறு புகார்களை அடுக்கினர். ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர்கள் கண்டு கொள்ளவில்லை. இதுதான் கட்சி வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவு என குற்றம் சாட்டினர். அவர்களை ஆய்வுக்குழுவினர் சமாதானப்படுத்தினர்.

கள ஆய்வக்கு சென்ற, முன்னாள் அமைச்சர்கள், கள ஆய்வில் கிடைத்த தகவல்களை தொகுத்து, கட்சி தலைமைக்கு அறிக்கை அளித்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தனித்தனியே அறிக்கை அளித்துள்ளனர். அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும், கட்சியை வளர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விபரங்களை தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கை அடிப்படையில், கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்ய, பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.



கட்சி தலைமை நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:




தலைமை அனுப்பிய கள ஆய்வுக்குழுவிடம், நிர்வாகிகள் அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். கட்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகம் சேர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். கோஷ்டி பூசலை களைய வேண்டும். மாவட்டச் செயலர்கள் தனித்து செயல்படுவதால், கட்சி மீது பற்றுள்ளவர்கள் ஒதுங்கி வருகின்றனர்.


அவர்கள் இணைந்து செயல்பட வழி செய்ய வேண்டும் என ஆய்வுக்குழுவினரிடம் பலரும் தங்களுடைய கருத்தாகத் தெரிவித்துள்ளனர்.இவ்விபரங்களை, கள ஆய்வுக் குழுவினர், தாங்கள் தலைமைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், சில மாவட்டச் செயலர்களை நீக்கிவிட்டு, புதிய மாவட்டச் செயலர்களை நியமிக்கவும், சில மாவட்டங்களில் கோஷ்டி பூசலில் ஈடுபடுவோரை அழைத்து பேசி சமாதானப்படுத்தி, அனைவரும் இணைந்து செயல்படவும், தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


அதன் அடிப்படையில், விரைவில் கட்சியில் மாற்றங்களை செய்து, தேர்தலுக்கு அனைவரையும் தயார்படுத்த வேண்டும் என்பது, கட்சியினர் விருப்பம். எனவே, தலைமை முடிவை அனைவரும் எதிர்பார்த்தபடி உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.




- நமது நிருபர் -

Advertisement