மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தம் மாற்றுத்திறனாளிகள் அவதி
சென்னை:தமிழகத்தில் 5,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர உதவித்தொகை, மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டிருப்பது, அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.-
தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், உடல் ஊனமுற்றோர், செவி குறைபாடு உடையோர் என, 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, 5,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறியதாவது:
ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில அரசுகள் வழங்குவதைப் போல், தமிழகத்திலும், குறைந்தபட்சம் 6,000 ரூபாய், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக வழங்க வேண்டும் எனப் போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, 5,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படாதது வேதனை அளிக்கிறது.
மகளிர் உரிமைத்தொகை பெறும், மாற்றுத் திறனாளி மகளிர் பலருக்கும், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை, அரசு நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு காரணங்களை கூறி, 5,000க்கும் மேற்பட்டோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
எனவே, அரசு நிறுத்தப்பட்டுள்ள உதவித் தொகையை வழங்க வேண்டும். இனி மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வழியே வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்களுக்கு, மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிட்டு, மாதாந்தி-ர பராமரிப்பு உதவித் தொகையை, முறையாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளை கேட்டபோது, 'இது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்னை குறித்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில், கூட்டம் நடக்கும். ஆனால், ஓராண்டாக அக்கூட்டம் நடத்தப்படவில்லை. தங்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, இக்கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.