நகராட்சி கமிஷனர் அறையில் ரகசிய கேமரா வைத்தது யார்? கிருஷ்ணகிரியில் சர்ச்சையால் பரபரப்பு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகராட்சியில், அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் தரப்பு மோதல், ஆர்ப்பாட்டம் என, அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், கமிஷனர் அறையில் ரகசிய கேமரா வைத்தது யார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில், தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடந்த ஜன., 25ல் நடந்தது.

இதில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை மட்டும் சுத்தம் செய்ததாகக் கூறி, நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி அறையில் வைத்து, சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணனை, நகராட்சி தலைவர் பரிதா நவாப்பின் கணவரும், நகர தி.மு.க., செயலருமான நவாப் திட்டுவதும், பதிலுக்கு ராமகிருஷ்ணனும் அவரை திட்டும் வீடியோ, நேற்று பரவியது.

இந்நிலையில், நகராட்சி ஊழியர்கள், கமிஷனர் அறைக்குள் கடந்த 29ல் நுழையும் போது, அங்கிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில், 'பீப்' சத்தம் கேட்டது.

இதையடுத்து, ஊழியர்கள் கடிகாரத்தை கழற்றி பார்த்தபோது உள்ளே ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிந்தது.

நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

நகராட்சியில், நான்கு இடங்களில் டிஜிட்டல் கடிகாரங்கள் உள்ளன. மற்ற இடங்களில் வைக்கப்படாத ரகசிய கேமரா, கமிஷனர் அறையில் வைக்கப்பட்டது ஏன் என தெரியவில்லை.

கேமராவும் அதிலிருந்த சிப்பும் கடந்த 29ல் எடுக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து, தி.மு.க., நகர செயலர் நவாப், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன் மோதல் காட்சிகள் மட்டும் எப்படி வெளிவந்தன?

கேமரா சிப், நகராட்சி அலுவலகத்தில் வைத்துச் செல்லப்பட்ட நிலையில், வீடியோ வெளியானது எவ்வாறு என, போலீசார் தான் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், நகராட்சி அலுவலர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறி, கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர செயலர் நவாப், நேற்று மாலை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரையிடம் புகார் மனு அளித்தார்.

Advertisement