திண்டுக்கல்லில் ரூ.6.40 லட்சம் திருட்டு: மதுரை முதியவர்கள் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் டூவீலர் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சத்தை திருடிய மதுரையைச் சேர்ந்த 2 முதியவர்களை போலீசார் சி.சி.டிவி காட்சிகள் மூலம் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம், 2 பவுன் நகைகளை மீட்டனர்.

திண்டுக்கல் குளத்துார் லட்சுமணபுரத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி பொன்னுவேலு 35. இவர் பிப்.,3 பழைய கரூர் ரோட்டில் உள்ள நிலத்தை ஒருவருக்கு விற்றார். அதன் மூலம் ரூ.6.40 லட்சம் கிடைத்தது. அதை டூவீலர் பெட்டியில் வைத்திருந்தார்.

கரூர் ரோடு நந்தவனப்பட்டி அருகே உள்ள ஒரு ஓட்டல் வாசலில் டூவீலரை நிறுத்தி விட்டு சாப்பாடு வாங்க சென்றார்.

சிறிது நேரம் பின் வந்த போது டூவீலரின் பெட்டி உடைக்கப்பட்டு ரூ.6.40 லட்சம் திருடு போயிருந்தது.

டி.எஸ்.பி., சிபின்சாய், எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் போலீசார் ஓட்டலில் உள்ள சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் வயதான இருவர் டூவீலர் பெட்டியை உடைத்து பணம் திருடியது தெரிந்தது.

போலீசார் விசாரித்து மதுரை சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் 65, தத்தனேரியைச் சேர்ந்த பாண்டியராஜனை 67, கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம், 2 பவுன் நகைகளையும் மீட்டனர்.

இவர்கள் மீது மதுரை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement