சிறுமி பலாத்காரம்: 72 வயது முதியவருக்கு 25 ஆண்டு சிறை
தேனி:தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 72 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெரியகுளம் தாலுகாவை சேர்ந்த 53 வயது பெண் செங்கல் காளவாசலில் கூலி வேலை செய்கிறார். இவரது கணவர் 72 வயதான கூலித்தொழிலாளி. இத்தம்பதியின் மகன், மருமகள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து, வெளியூரில் வேலைக்கு சென்று 4 ஆண்டுகளாக வீடு திரும்ப வில்லை. பேரன், பேத்தி தாத்தா, பாட்டி கண்காணிப்பில் வளர்கின்றனர்.
10 வயதான பேத்தி அப்பகுதி பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார். 2024 ஏப்.27ல் காலை பாட்டி வேலைக்கு சென்றதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். பணி முடிந்து பாட்டி வீட்டிற்கு வந்த போது, 72 வயதான தனது கணவர், 10 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம்செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கணவரை தாக்க முயன்றார். முதியவர் தப்பி ஓடினார்.
மனைவி புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, முதியவரை கைது செய்தார். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் அமுதா ஆஜரானார். 72 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். சிறுமியின் கல்வி, பராமரிப்பு, எதிர்கால பொருளாதார தேவைக்கு அரசு ரூ.7.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும். அதில் குற்றவாளியின் அபராதத் தொகை அடங்கும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.