'பென்ஷன்' குறித்து ஆராய குழு அமைப்பு போராட்டத்தை கைவிட சங்கங்கள் மறுப்பு
சென்னை:ஓய்வூதியம் குறித்து ஆராய அரசு குழு அமைத்துள்ள நிலையில், போராட்டத்தை தொடர, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என, 2021 சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை; பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே அமலில் உள்ளது.
9 மாதம் அவகாசம்
இந்நிலையில், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்து, அதில் சிறந்ததை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய, ஒன்பது மாதங்கள் வரை இக்குழுவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தாமல், குழு அமைத்ததற்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, வரும் 14ம் தேதி, அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து, மாநிலம் முழுதும் வரும் 25ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்திற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஆய்வு குழு அமைத்ததால், போராட்டம் ரத்து செய்யப்படும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திட்டமிட்டபடி போராட்டம் நடத்த, ஜாக்டோ - ஜியோ அமைப்பு, தமிழக தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தயாராகி வருகின்றன.
தள்ளிப்போடும் முயற்சி
தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் செல்லையா கூறியதாவது:
ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைப்பது, அந்த திட்டத்தை தள்ளிப்போடும் முயற்சி. ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைக்கும் செய்தி புதிதல்ல.
ஏற்கனவே, 2015ல் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்தபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து, அறிக்கை பெற்றார்.
அதைத் தொடர்ந்து, 2017ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை, அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம் வழங்கப்பட்டது; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், 'ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்' என்றார். அதை, தேர்தல் வாக்குறுதியாகவும் அளித்தார்.
இந்த குழு அமைக்கும் விவகாரமே, திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து தப்பிப்பது அல்லது தள்ளி போடுவதற்காகத் தான். அதனால், இந்த அறிவிப்பை ரத்து செய்வதுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
2026ல் எதிர்க்கட்சி தலைவர் பதவி பரிசு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை
மதுரை:''தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், 2026 தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிப்போம்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி எச்சரித்துள்ளார்.
இது குறித்து, மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது:
பழைய ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராய, மூன்று பேர் கொண்ட குழு அமைத்து தி.மு.க., அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இக்குழு விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஒன்பது மாதத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
குழு அமைப்பது என்பது, 2021 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.,வின் வாக்குறுதி எண் 309க்கு எதிரானது. தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தாமல், குழு அமைத்து அரசு ஊழியர்களை ஏமாற்றலாம் என்ற முதல்வர் ஸ்டாலின் திட்டம் பலிக்காது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகனின் தொகுதி உட்பட 17 தொகுதிகளில் தி.மு.க.,வின் வெற்றியை தீர்மானித்தது, அரசு ஊழியர்களின் ஓட்டுகள் தான்.
ஏறிய ஏணியை எட்டி உதைத்தவர்கள் வரலாற்றில் துாக்கி எறியப்படுவர் என்பதை முதல்வர் மறக்க வேண்டாம். குழு அமைத்து, அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் நடவடிக்கையை கைவிட்டு, தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், கொள்கை ரீதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இதை வலியுறுத்தி, பிப்., 25ல் தமிழகம் முழுதும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அரசு ஊழியர்களுக்கு எதிரான துரோக நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் தொடரும் பட்சத்தில், 2026 சட்டசபை தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிப்பதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும்
-
'புட் பாய்சன்' ஏற்படுத்திய ஓட்டலுக்கு சீல்
-
கல்வி கடன் விபரத்தை விற்ற வங்கி: இழப்பீடுடன் வருத்தம் தெரிவித்து கடிதம்
-
விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்
-
ஆயிரக்கணக்கான பறவைகள் அணைப்பாளையம் ஏரியில் அடைக்கலம்
-
மாணவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்: பொது சேவை மையத்தில் புதிய வசதி
-
கானல் நீரானதா மதுரையின் '‛விவசாய பல்கலை' கனவு 2021 ல் சொன்ன வாக்குறுதி என்னாச்சு