கானல் நீரானதா மதுரையின் '‛விவசாய பல்கலை' கனவு 2021 ல் சொன்ன வாக்குறுதி என்னாச்சு
மதுரை : சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் 2021 தேர்தல் அறிக்கையில் அறிவித்த படி மதுரை விவசாயக் கல்லுாரியை பல்கலையாக மாற்ற தமிழக அரசு முன்வரவேண்டும்.
மதுரை ஒத்தகடையில் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாய கல்லுாரியும், சமுதாய அறிவியல் கல்லுாரியும் செயல்படுகிறது. விவசாய கல்லுாரியில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., மற்றும் பி.எச்டி., விவசாய படிப்பும், சமுதாய அறிவியல் கல்லுாரியில் மனையியலில் பி.எச்டி., வரையும் கற்றுத்தரப்படுகிறது.
ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு முன்பே விவசாய கல்லுாரியை பல்கலையாக மாற்ற திட்டமிடப்பட்டு பின் கைவிடப்பட்டது.
2021 தி.மு.க., தேர்தல் அறிக்கையில் மதுரையில் விவசாய பல்கலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பின் அமைச்சர் மூர்த்தியும் விவசாய பல்கலை அமைக்கப்படும் என பல்வேறு நிகழ்ச்சிகளின் போது வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைத்து நான்காண்டுகளாகும் நிலையில் இதுவரை பல்கலை ஆக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
என்னென்ன தேவை
கல்லுாரி வளாகம் 400 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. எனவே பல்கலை அமைப்பதற்கான இடத்தை வெளியில் தேட வேண்டிய அவசியம் இல்லை. அதிகபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் துணைவேந்தர், பதிவாளர், இயக்குநர்களுக்கான கட்டடங்களை புதிதாக கட்டினால் போதும். சமீபத்தில் நிறைய வகுப்பறைகள், ஆய்வக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆடிட்டோரியம், செமினார் ஹால், தேர்வு ஹால், வகுப்பறை கட்டடங்கள் போதுமான அளவில் உள்ளன. இங்கேயே தோட்டக்கலைத்துறை, பழப்பண்ணை, மத்திய நெல் பண்ணை இருப்பதால் விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகள், காய்கறி, பழ நாற்றுகளை உற்பத்தி செய்யும் மையங்களும் செயல்படுகின்றன. மனையியல் கல்லுாரி சார்பில் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பம் அதற்கான உபகரணங்கள், விரிவாக்க மையங்கள் செயல்படுகின்றன.
மேலும் நபார்டு வங்கி நிதியில் கட்டப்பட்ட மதுரை வேளாண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் (மாபிப்) இங்கே செயல்படுவதால் படிக்கும் போதே மாணவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றலாம்.
தமிழகத்திற்கு ஒன்று தானா
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் விவசாயப் பல்கலை, தோட்டக்கலை பல்கலைகள் நிறைய செயல்படுகின்றன. கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை பல்கலை அமைப்பதற்கான அரசாணை தி.மு.க., ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ஆட்சி மாறிய பின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அந்த அரசாணையை ரத்து செய்தார். அதன் பின் விவசாயம், தோட்டக்கலைக்கான பல்கலை தமிழகத்தில் தற்போது வரை உருவாக்கப்படவில்லை.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மதுரையில் விவசாய கல்லுாரியை விவசாய பல்கலையாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் விவசாயப் படிப்போடு, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பி.டெக் படிப்புகளையும் கொண்டு வரமுடியும். மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தலாம். ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர்கள், பிற பணியாளர்களுக்கான எண்ணிக்கையை அதிகரித்தால் தென் மாவட்டங்களுக்கு என தனியாக ஒரு பல்கலையை உருவாக்க முடியும். தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசு மனது வைக்க வேண்டும்.
மேலும்
-
ரயில்வே ஸ்டேஷனில் கட்டுமான பணி முடியுமா?
-
ஒருபுறம் 'மில்லிங்' மறுபுறம் 'டிரில்லிங்'
-
வேலி அமைக்க ரயில்வே முயற்சி; தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
-
கூடுதலாக சோலார் மின் உற்பத்தி மையம்; ரூ.30 கோடியில் நிறுவுகிறது மாநகராட்சி
-
முறைகேடு நிறுவனங்கள் சிக்கின
-
வேளாண் பல்கலை மலர் கண்காட்சி; நாளை துவங்கி 5 நாட்கள் நடக்கிறது