பழநி தைப்பூச விழா பக்தர்களுக்காக கிளாம்பாக்கத்துக்கு சிறப்பு பஸ்கள்

திண்டுக்கல் : தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக திண்டுக்கல் மாவட்டம் பழநியிலிருந்து இன்று(பிப்., 7) முதல் 16 வரை சென்னை கிளாம்பாக்கத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

பழநி முருகன் கோயிலில் பிப்.,11ல் தைப்பூசத்திருவிழா நடக்கிறது. இதற்காக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக நடந்து வருகின்றனர். இவர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் முடித்து திரும்பி செல்லும் போது போதிய அளவில் பஸ்கள் இருப்பதில்லை. இதை தவிர்க்க தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக பழநியிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு இன்று முதல் பிப்.,16 வரை தினமும் 2 பஸ்கள் இயக்கப்படுகிறது.

இப்பஸ் இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு கிளாம்பாக்கம் செல்லும். பக்தர்கள் இவற்றில் பயணிக்கலாம் என போக்குவரத்து கழக கிளை மேலாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

Advertisement