பாதாள சாக்கடை திட்டத்தில் 90 கி.மீ.,; 10 ஆண்டுகளாக காத்திருந்தும் பயனில்லை

மாநகராட்சியில் பழைய 72 வார்டுகளில் மேற்கு, மத்தி, தெற்கு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்டு 90 கி.மீ., தொலைவுக்கு தற்போது வரை பாதாள சாக்கடை வசதி இல்லை. செப்டிக் டேங் அமைத்து கழிவு நீரை மக்கள் வெளியேற்றி வருகின்றனர்.இந்நிலையில், 100 வார்டுகளாக அதிகரித்து சமீபத்தில் நகரில் விடுபட்ட பகுதிகள் உட்பட விரிவாக்க வார்டுகளிலும் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.471.89 கோடி செலவில் பாதாளச் சாக்கடை திட்டம் துவங்கும் நிலையில் உள்ளது.

ஆனால் பல ஆண்டுகளாக நகர்ப் பகுதியில் இத்திட்டத்திற்காக காத்திருந்த வார்டுகள் தற்போதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் காரணங்களும் உள்ளது என வார்டு மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: மாநகராட்சி கமிஷனராக சிம்ரன் ஜீத் இருந்தபோது பழைய 72 வார்டுகளில் விடுபட்ட பகுதிகளை, புதிய பாதாளச் சாக்கடை திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் புதிய திட்டத்திலும் இப்பகுதிகள் சேர்க்கவில்லை. குறிப்பாக 67 வது வார்டில் 8 கி.மீ., 68 வது வார்டில் 6 கி.மீ., 70 வது வார்டில் 10 கி.மீ., என மொத்தம் 90 கி.மீ.,க்கு பாதாளச் சாக்கடை வசதி இல்லை.

ஆனால் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டத்திற்கான டெபாசிட் தொகை செலுத்திவிட்டனர். ஆனால் தற்போது புதிய பாதாளச் சாக்கடை திட்டத்தில் கிழக்கு தொகுதியில் குடியிருப்பு பகுதிகள் இல்லாத வயல்வெளி வரை கூட இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதனால் செப்டிக் டேங் ஏற்படுத்தி தான் கழிவு நீரை வெளியேற்ற முடிகிறது. மாநகராட்சியில் உரிய வரி செலுத்தியும், செப்டிக் டேங் கிளீன் செய்வதற்கும் ரூ.பல ஆயிரம் செலவிட வேண்டியுள்ளது. இந்த பாரபட்சத்தை நீக்கி நகரில் விடுபட்ட வார்டு பகுதிகளை புதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றனர்.

நகரில் அமைச்சர் தியாகராஜன் தொகுதியான மத்திய தொகுதிக்குள் பல கி.மீ.,க்கு பாதாளச் சாக்கடை திட்டம் இல்லை. அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் சமீபத்தில் துவங்கிய திட்டத்தில் இப்பகுதிகளை சேர்க்கும் வகையில் அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவரது கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் இரண்டாம்கட்ட திட்டத்திலும் நகர் பகுதிக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பறிபோனது. அதேநேரம், அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு தொகுதியில் அனைத்து பகுதியிலும் இத்திட்டத்தை கொண்டு சென்றுவிட்டார். எனவே நகர் பகுதியில் விடுபட்ட பகுதிகளை இரண்டாம்கட்ட திட்டத்தில் இணைக்க அமைச்சர் தியாகராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வாய்ப்பை தவற விட்ட அமைச்சர்

Advertisement