டிரைவரிடம் பணம் பறித்த இரு போலீசார் 'சஸ்பெண்ட்'

கூடுவாஞ்சேரி:காரில் துாங்கிய ஓட்டுனரை மிரட்டி, 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய இரு போலீசாரை, தாம்பரம் போலீஸ் கமிஷனர், 'சஸ்பெண்ட்' செய்துள்ளார்.

தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம் சாலையில், கடந்த 3ம் தேதி இரவு, கார் ஓட்டுநர் சரவணன் என்பவர், காரை நிறுத்திவிட்டு துாங்கியுள்ளார். அப்போது, ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர்கள் தர்மன், செந்தில் குமார் இருவரும், 'நீ மது அருந்தி இருக்கிறாய்' என, சரவணனை மிரட்டி, மொபைல் போன் 'க்யூ.ஆர்., கோடு' வாயிலாக ஸ்கேன் செய்து, 1,500 ரூபாயை பறித்துள்ளனர்.

இதுகுறித்து, சரவணன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்தனர். அதில், போலீஸ்காரர்கள் தர்மன், செந்தில்குமார் இருவரும், இரவு நேரங்களில் இதுபோல் பல கார் ஓட்டுநர்களிடம் பணம் பறித்திருப்பது தெரிய வந்தது.

விசாரணை விபரத்தை அறிந்த தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின்தினேஷ் மோதக், போலீஸ்காரர்கள் இருவரையும் நேற்று, பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Advertisement