தென் மண்டல 14 வயது சிறுவர்களுக்கான கிரிக்கெட் தொடர்:
புதுச்சேரி : தென் மண்டல 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் தொடரில், நேற்று முன்தினம் மூன்று போட்டிகள் நடந்தன.
புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஹைதராபாத், கோவா ஆகிய மாநில கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து 14 வயது சிறுவர்களுக்கான தென்மண்டல 2 நாள் கிரிக்கெட் தொடர், புதுச்சேரி, துத்திப்பட்டு சீகெம் மைதானங்களிலும், லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மைதானத்திலும் கடந்த 27ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
கடந்த 5ம் தேதி சீகெம் மைதானம் 2ல் நடந்த போட்டியில் புதுச்சேரி அணியும், கேரளா அணியும் மோதின. முதலில் ஆடிய கேரளா அணி 130 ரன்களில் ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணியின் அபை சிங் 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து, ஆடிய புதுச்சேரி அணி 210 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. புதுச்சேரி அணியின் அபை சிங் 65 ரன்கள் அடித்தார். 2வது இன்னிங்ஸ் துவங்கிய கேரளா அணி ஆட முடிவில் 3 விக்கெட் இழந்து 167 ரன்கள் எடுத்தது. டிராவில் முடித்த ஆட்டத்தில், 65 ரன்கள் மற்றும் 4 விக்கெட் எடுத்த புதுச்சேரி அணியின் அபை சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
சீகெம் மைதானம், 3ல் நடந்த போட்டியில் கோவா அணியும், கர்நாடகா அணியும் ஆடின. முதலில் ஆடிய கோவா அணி 169 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. பின்னர், ஆடிய கர்நாடகா அணி 5 விக்கெட் இழந்து 314 ரன்களில் டிக்ளர் செய்தது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் கோவா 69 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. கர்நாடகா அணி இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 203 ரன்கள் எடுத்த கர்நாடகா அணியின் நிதீஷ் ஆர்யா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
லக்ஷ்மி நாராயணா மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், ஆந்திரா அணியும் மோதின. ஹைதராபாத் அணி 218 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. தொடர்ந்து ஆடிய ஆந்திரா அணி 240 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. டிராவில் முடிந்த ஆட்டத்தில், ஆந்திரா அணியின் கவுசிக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.