நாய்க்கடிக்கு 4.80 லட்சம் பேர் பாதிப்பு: கருத்தடை மையம் அமைக்குமா அரசு

சிவகங்கை:தமிழகத்தில் வீட்டில் வளர்ப்பது, தெருக்களில் திரிவது உட்பட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை முறையாக பராமரித்து, தடுப்பூசி போட்டு விடுகின்றனர்

. இந்த நாய்கள் மனிதர்களை கடித்தால் பெரிய பாதிப்பு இருக்காது. தெருக்களில் திரியும் நாய்கள் இறைச்சி கடைகளில் கிடைக்கும் கழிவுகளை சாப்பிட்டு அவற்றிற்கு தோல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நோய் தாக்குவதால் அவை வெறிபிடித்தவையாக மாறி விடுகின்றன. அவை கடிப்பதன் மூலம் 'ரேபிஸ்' நோய் பாதிப்பிற்கு உள்ளாகி பலர் பலியாகின்றனர். தமிழகத்தில் 2024 ஆண்டில் 4.80 லட்சம் பேரை நாய்கள் கடித்துள்ளன. இதில் பாதிக்கப்பட்டு ரேபிஸ் நோய் மற்றும் பிற பிரச்னைகளால் 37 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவை கடிப்பதின் மூலம் 'ரேபிஸ்' நோய் பாதித்து உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியுள்ளன. எனவே தமிழக அரசு இதற்கு நிரந்தர தீர்வு காணும் விதத்தில் மாவட்டந்தோறும் விலங்குகள் கருத்தடை மையம் அமைத்து நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

விலங்குகள் கருத்தடை மையம் அவசியம்:கால் நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தெருக்களில் திரியும் நாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருக்க உரிய நேரத்திற்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திய பின் அந்நாய்களை தனியாக 5 முதல் 6 நாட்கள் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். இவற்றை உள்ளாட்சி அமைப்புகள் தான் செய்ய வேண்டும்.

விலங்குகள் நல வாரிய விதியின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 'விலங்குகள் கருத்தடை மையம்' திறக்கப்பட்டு, தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். ஒரு சில மாநகராட்சியில் மட்டுமே கருத்தடை மையம் செயல்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இல்லை. நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதை தவிர்க்க அரசு மாவட்டத்திற்கு ஒரு கருத்தடை மையம் ஏற்படுத்தி, உள்ளாட்சி அமைப்புகள் பிடித்து வரும் நாய்களுக்கு கருத்தடை செய்து, 6 நாட்கள் கண்காணித்து விட்டால் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றார்.

Advertisement