ஜெகபர்அலி கொலையில் கைதான 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை:திருமயம் அருகே வெங்களுரில், ஜெகபர்அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஆஜர்படுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களுரில், கனிம வளக் கொள்ளைக்கு எதிராக புகார் அளித்த ஜெகபர்அலி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட துளையனூர் பகுதியை சேர்ந்த ஆர்.ஆர்.கல் குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா உள்ளிட்ட ஐந்து பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை செய்வதற்கு பிப். 3ம் தேதி புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்வதற்கு அனுமதி அளித்தது.

அதன்படி, மூன்று தினங்களாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஐந்து பேரையும் தனித்தனியாக விசாரணை செய்தனர்.

கஸ்டடி நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஐந்து பேரையும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதனையடுத்து, நீதிபதி பாரதி 5 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கை பிப். 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட ஐந்து பேரையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் புதுக்கோட்டை மாவட்ட சிறைக்கு பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர்.

Advertisement