கோவையில் சட்டவிரோதமாக மண் கொள்ளை விவகாரம் விசாரணையை துவக்கியது சிறப்பு புலனாய்வு குழு

தொண்டாமுத்துார்:கோவையில், வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் சட்டவிரோதமாக மண் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துவக்கி உள்ளது.

கோவை மாவட்டத்தில், சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளை மூடக்கோரி, கோவையை சேர்ந்த கற்பகம் என்பவரும், தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்களை பாதுகாக்ககோரி, வனவிலங்கு ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதேபோல, கோவை பேரூர் தாலுகாவிற்குட்பட்ட ஆலாந்துறை, வெள்ளிமலைபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சட்டவிரோதமாக மண் வெட்டி எடுக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சிவா மற்றும் லோகநாதன் ஆகியோரும்மனுக்களை தாக்கல் செய்தனர்.

இம்மனுக்களை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணை செய்தது.

அதன்பின், சட்டவிரோத மண் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த சென்னை மாநில குற்ற ஆவண காப்பக எஸ்.பி., நாகஜோதி, ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி., ஷஷாங்க் சாய் அடங்கிய, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவில் நியமிக்கப்பட்ட எஸ்.பி., ஷஷாங்க் சாய், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவில் பணியாற்றி வருவதால், சிறப்பு புலனாய்வு குழுவில் நீட்டிக்க இயலாது என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து, எஸ்.பி., ஷஷாங்க் சாய் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, எஸ்.பி., நாகஜோதி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விரைந்து விசாரணையை துவக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில், எஸ்.பி., நாகஜோதி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர், கோவை பேரூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் விசாரணையை துவக்கியுள்ளனர். முதற்கட்டமாக, வெள்ளருக்கம்பாளையம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மண் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களை, சிறப்பு புலனாய்வு குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள வி.ஏ.ஓ.,க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்களையும் அழைத்து, இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

அதன்பின், மண் கொள்ளை குறித்து பதியப்பட்டுள்ள வழக்குகளின் கோப்புகளை ஆராய்ந்து, அதில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்குழுவினர், தொடர்ந்து மண் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் செங்கல்சூளைகளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.

Advertisement