காலாப்பட்டில் செயின் பறிப்பு 2 சிறார் உட்பட 4 பேர் கைது; 9 சவரன் நகை, பணம் பறிமுதல்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848838.jpg?width=1000&height=625)
புதுச்சேரி: காலாப்பட்டில் பெண்ணிடம் செயின் பறித்த 2 சிறார்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பெரியகாலாப்பட்டு, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை மனைவி விஜயக்குமாரி, 57; காலாப்பட்டு-மாத்துார் சாலை சந்திப்பில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 31ம் தேதி இரவு, வியாபாரத்தை முடித்துகொண்டு கணவருடன் பைக்கில் சென்றார். அப்போது, வழியில் அடையாளம் தெரியாத இருவர் மறித்து, விஜயக்குமாரி கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.
புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் கடந்த 2ம் தேதி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
சீனியர் எஸ்.பி., கலைவாணன் உத்தரவின் பேரில், கிழக்கு எஸ்.பி., வீரவல்லபன் மேற்பார்வையில், காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் கிழக்கு கிரைம் போலீஸ் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 17 வயது சிறுவர்கள் இருண்டு பேர் பைக்கில் வந்து, செயின் பறித்து செல்வது தெரியவந்தது.
அந்த சிறார்களை பிடித்து விசாரித்தபோது, பெரியக்காலாப்பட்டு, இ.சி.ஆர்., சாலை சூர்யா (எ) முருகன், 28; செயின் பறிக்க திட்டமிட்டு கொடுத்ததும், பறிக்கப்பட்ட செயினை செல்லியம்மன் நகர், ராகுல்காந்தி தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி, 44; மூலம் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, 2 சிறார்கள் மற்றும் சூர்யா, ராமமூர்த்தி ஆகியோரையும், புதுச்சேரி போலீசார் நேற்று கைது செய்து, 70 கிராம் தங்க நகை கட்டியும், ரூ. 40 ஆயிரம் பணத்தையும் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சூர்யா, ராமமூர்த்தி இருவரையும் காலாப்பட்டு சிறையிலும், 2 சிறார்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
செயின் பறிப்பு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமிநாராயணன், கிரைம் உதவி சப்இன்ஸ்பெக்டர்கள் பெரியண்ணசாமி, சுரேஷ், ஏட்டுகள் சத்தியமூர்த்தி, கார்த்தி, அரிஷ்குமார், ஸ்ரீராம், காவலர் சந்திரசேகரன் ஆகியோரை சீனியர் எஸ்.பி., கலைவாணன் பாராட்டினார்.