அனுமதியின்றி செயல்பட்ட 6 டாஸ்மாக் பார்களுக்கு 'சீல்'
அவிநாசி; திருப்பூர் மாவட்ட எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், மாவட்ட மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன் ஆகியோர் உத்தரவின் பேரில், மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர்கள் கோவிந்தசாமி, பழனிவேல்ராஜன் ஆகியோர் தலைமையில், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., அசோக்குமார் மற்றும் போலீசார் அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 'டாஸ்மாக்' கடைகள் மற்றும் பார்களில் ஆய்வு செய்தனர்.
அதில், அரசுக்கு மாதந்தோறும் கட்ட வேண்டிய ஏலத்தொகையை கட்டாமல் அரசு அனுமதியின்றி 'டாஸ்மாக்' கடையுடன் கூடிய பார்கள், செயல்பட்டது தெரியவந்தது. அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கடை எண்: 1511, கால்நடை மருத்துவமனை பஸ் ஸ்டாப் எதிரில், கடை எண்: 1923, கருவலுாரில் கடை எண்: 2206, சேவூரை அடுத்த போத்தம்பாளையத்தில் கடை எண்: 2201, காசிலிங்கம்பாளையம் கடை எண்: 1512 மற்றும் பொங்குபாளையம் கடை எண்: 1989 ஆகிய ஆறு டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் அனுமதியின்றி செயல்பட்டு வந்ததால், அதிகாரிகள் கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர்.