'விடாமுயற்சி' ரிலீஸ்; அஜித் ரசிகர் உற்சாகம்
திருப்பூர்; நடிகர் அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாரான 'விடாமுயற்சி' திரைப்படம் நேற்று வெளியானது.
திருப்பூரில், படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன் பிளக்ஸ், கொடி, தோரணங்கள் கட்டியிருந்த அவரது ரசிகர்கள், நேற்று காலை, 9:00 மணிக்கு, முதல் காட்சி துவங்கும் முன், பேண்டு வாத்தியம் இசைக்க செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என, தியேட்டர் வாசல்கள் களைகட்டின.
திருப்பூர் மாவட்ட அஜித் ரசிகர் மன்ற தலைவர் ரமேஷ் கூறியதாவது: 'விடாமுயற்சி' படம், ஆங்கில படம் போன்று எடுத்துள்ளனர்; அஜித் நடிப்பு, பிரமிக்க வைக்கிறது. உற்சாகமாக கொண்டாடினோம். எத்தனை ஆண்டு கழித்து, அவரது சினிமா வெளி வந்தாலும், ரசிகர்கள் மத்தியிலான ஆர்வம் குறையில்லை.
இடையில், 5 ஆண்டுகள் அவர் நடிக்கவே இல்லை; மன்றத்தை கலைத்தார். அப்போதும் ரசிகர்கள் குறையவில்லை. குடும்பத்தை கவனியுங்கள்' என்கிறார், அதனை ரசிகர்கள் பின்பற்றுகின்றனர். பத்மபூஷன் விருது பெற்றுள்ளார்.
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவையெல்லாம் ஒரு ரசிகனாக எங்களுக்கு பெருமை. இவ்வாறு அவர் கூறினார்.
திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம் கூறுகையில், ''இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின் அஜித் நடித்த படம் திரைக்கு வருவது, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 50 திரைகளில், இப்படம் திரையிடப்பட்டது. அவரது ரசிகர்கள், ஒரு வாரம் முன்பே, டிக்கெட் முன்பதிவு செய்ய துவங்கி விட்டனர். அனைத்து தியேட்டர்களிலும், ஹவுஸ்புல் காட்சிகளாவே சினிமா ஓடியது,'' என்றார்.