2026 தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி பரிசு

மதுரை : ''தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிப்போம்'' என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது:



பழைய ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய 3 திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்திட, 3 பேர் கொண்ட குழு அமைத்து தி.மு.க., அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஒன்பது மாதத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

குழு அமைப்பது என்பது 2021 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.,வின் வாக்குறுதி எண் 309 க்கு எதிரானது. தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தாமல், குழு அமைத்து அரசு ஊழியர்களை ஏமாற்றலாம் என்ற முதல்வர் ஸ்டாலினின் திட்டம் பலிக்காது. 2021 சட்டசபைத் தேர்தலில் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகனின் தொகுதி உட்பட 17 தொகுதிகளில் தி.மு.க.,வின் வெற்றியை தீர்மானித்தது அரசு ஊழியர்களின் ஓட்டுகள்தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.

ஏறிய ஏணியை எட்டி உதைத்தவர்கள் வரலாற்றில் துாக்கி எறியப்பட்டு இருக்கின்றனர் என்பதை முதல்வர் மறந்துவிட வேண்டாம். குழு அமைத்து, அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் நடவடிக்கையை கைவிட்டு, தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் கொள்கை ரீதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.


அதனை அமல்படுத்த வலியுறுத்தி பிப். 25 ல் தமிழகம் முழுவதும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.


அரசு ஊழியர்களுக்கு எதிரான துரோக நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் தொடரும்பட்சத்தில் 2026 சட்டசபைத் தேர்தலில் ஸ்டாலினுக்கு 'எதிர்க்கட்சித் தலைவர்' பதவியை பரிசளிப்பதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement