நெல் மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை
விக்கிரமங்கலம் : விக்கிரமங்கலம் பகுதியில் நெல் மகசூல் குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விக்கிரமங்கலம் பகுதியில் பயிரிட்டிருந்த அதிசன்ன ரகமான 'அக் ஷயா' நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. இப்பகுதி கல்புளிச்சான்பட்டி, கொசவபட்டி, நடுமுதலைக்குளம், கோவில்பட்டி, நரியம்பட்டி, நடுமுதலைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் திருமங்கலம் கால்வாய் மற்றும் கண்மாய் பாசனத்தில் அதிகளவில் 'அக் ஷயா' நெல் ரகம் பயிரிடப்பட்டிருந்தது. தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் ஏக்கருக்கு 30 முதல் 35 மூடை வரை கிடைப்பதற்கு பதிலாக 10 க்கும் குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கல்புளிச்சான்பட்டி விவசாயி பால்பாண்டி: 2 மாதங்களுக்கு மேலாக காலம் தவறிய பருவநிலை மாற்றத்தால் அதிக பணி, மழை, வெயில் என பயிரின் விளைச்சல் பாதித்தது. நெற் பயிர்களில் கதிர்கள் பிடிக்கவில்லை. உழவு நடவு, உரம் என ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்துள்ளோம். அறுவடை இயந்திரம் கிடைக்கவில்லை, கூடுதல் வாடகையில் 'பெல்ட்' இயந்திரம் பயன்படுத்தினோம். விலை இருந்தும், விளைச்சல் இல்லாததால் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.