கடல் வழியாக பாய்மர கப்பலில் உலகை வலம் வரும் கடலுார் மங்கை
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848926.jpg?width=1000&height=625)
கடலுார் : கடற்படையில் பணிபுரியும் கடலுாரை சேர்ந்த பெண், கேரளாவை சேர்ந்த கடற்படை பெண் அதிகாரியுடன் சேர்ந்து, பாய்மர படகில் உலகை சுற்றிவருகின்றனர்.
கடலுாரை சேர்ந்தவர் அழகிரிசாமி மகள் ரூபா, 32; கடலுாரில் பள்ளி படிப்பை முடித்த இவர், சென்னையில் பொறியியல் படித்தார். கடற்படை பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பிய அவர், கல்லுாரியல் படிக்கும்போதே என்.சி.சி.,யில் சேர்ந்து, அதற்காக தயாரானார்.
அவர் விரும்பியபடியே, 2018ம் ஆண்டு இந்திய கடற்படையில் ஆயுதங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். தான் விரும்பிய பணியில் சேர்ந்தது முதல் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி வந்தார். கடந்த ஆண்டு, ஏப்ரலில் இந்திய கடற்படை பாய்மர கப்பல் ஐ.என்.எஸ்.வி., தாரிணியில் கடல் கடந்த நீண்ட பயணத்தை முடித்து முதல் பெண்கள் என்ற சாதனையை கேரளாவை சேர்ந்த கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் தில்னாவோடு சேர்ந்து படைத்துள்ளார்.
தனது சாதனையை தொடர்ந்து, தில்னாவோடு சேர்ந்து கடல் வழியாக உலகை சுற்றி வரும் பயணத்திற்கு தேர்வாகினார். கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் முதல் பயிற்சி மேற்கொண்டனர்.
கடலில் அடிக்கடி பல ஆயிரம் கி.மீ., செய்லிங் சென்று வரும் இவர்கள், கடல் வழியாக உலகை சுற்றிவந்து சாதனை படைக்க வேண்டும் என எண்ணிய இவர்களுக்கு காலம் வாய்ப்பு வழங்கியது. அதற்கான உடற்திறன் தேர்வு, மன உறுதி தேர்வு போன்றவற்றில் தேர்ச்சி பெற்றனர்.
இருவரும் கோவாவில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் புறப்பட்டனர். 38 நாட்கள் கழித்து ஆஸ்திரேலியா சென்றடைந்தனர். தொடர்ந்து 24 நாட்கள் கழித்து நியூசிலாந்திற்கும், பாக்லாந்து தீவுகள், தென் ஆப்ரிக்கா, அணுக இயலாத பெருங்கடல் துருவம் 'பாய்ண்ட் நெமோ' ஆகிய இடங்கள் உட்பட 21,600 நாட்டிக்கல் மைல் சுற்றி, மீண்டும் கோவாவிற்கு வரும் மே மாதம் திரும்புகின்றனர்.
சாதனை படைக்கும் கடலுார் மங்கை ரூபாவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.