நிலையூர் கம்பிக்குடி கால்வாயில் 10 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

காரியாபட்டி : விவசாயம், கால்நடைகள், குடிநீர், உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய நிலையூர் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாயில் 10 நாட்களுக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

காரியாபட்டி கம்பிக்குடியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நிறைந்து உபரி நீர் 90க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு சென்று சேரும் வகையில் வரத்து கால்வாய் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கம்பிக்குடி கண்மாய்க்கு நீர் வரத்துக்கு போதிய ஆதாரம் இன்றி இருந்தது. அனைத்து கண்மாய் பாசன விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் வகையில் மதுரை மாவட்டம் நிலையூர் வரை கால்வாய் ஏற்படுத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் பயன்பெறும் வகையில் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் திட்டம் ஏற்படுத்த காரியாபட்டி பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து நீட்டிப்பு கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. வைகை ஆற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீர் நிலையூர் கால்வாயில் திறந்து விடப்பட்டு கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.

சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து நீர் நிலைகளுக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில் வரத்துக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து வைகை அணையில் கூடுதல் தண்ணீர் இருப்பு உள்ளதால் கம்பிக்குடி பகுதி பாசன விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று 10 நாட்களுக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.

இதன் மூலம் விவசாயம், கால்நடைகள், குடிநீர் தேவை பூர்த்தி அடையும். கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement