பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் குன்றத்தில் இன்று தெப்பத் திருவிழா
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848974.jpg?width=1000&height=625)
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தை கார்த்திகை, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி தேரோட்டம் நடந்தது. இன்று (பிப். 7) தெப்பத் திருவிழா நடக்கிறது.
முகூர்த்த கால்
சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அலங்காரத்தில் ஜி.எஸ்.டி. ரோடு தெப்பக்குளம் கரையில் எழுந்தருளினர். சிவாச்சாரியார் யாகம் வளர்த்து சுத்தியல், அரிவாள், உளிக்கு தீபாராதனை முடிந்து தெப்பக்குள தண்ணீரில் அமைத்திருந்த மிதவை தெப்பத்தில் முகூர்த்த காலுக்கு பூஜை செய்து கட்டப்பட்டது. மூங்கிலால் தெப்பத்தை முட்டு தள்ளும் நிகழ்ச்சி நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் மணிசெல்வம், சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர்.
குன்றத்தில் தேரோட்டம்
16 கால் மண்டபம் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த வைர தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பூஜை முடிந்து சக்கரங்களில் பூசணிக்காய் வைத்து தேங்காய் உடைக்கப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. இரவு சுவாமி தங்கமயில் வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மிதவை தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத் திருவிழா நடக்கிறது.