எஸ்.எஸ்.எல்.சி.,யில் அதிக தேர்ச்சி விகிதம் கோலார் கல்வி துறைக்கு பெரும் சவால்

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், கோலார் மாவட்டம் 2023 -- 2024 கல்வியாண்டில் 20ம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.

இம்முறை மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறுவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வுகளுக்கு இன்னும் 45 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து, கோலார் மாவட்ட கல்வித் துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டி:

எஸ்.எஸ்.எல்.சி., பாடத்திட்டம் கற்பித்தல் நிறைவடைந்து, 'ரிவிஷன்' துவங்கி உள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. 19,300 மாணவர்கள் கலந்து கொண்டனர். படிப்பில் மிகவும் பின்தங்கி உள்ளதாக 7,152 மாணவர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர்.

செயல் திட்டம்



இவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி, செயல் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த தேர்வில் ஏற்பட்ட பின்னடைவை சரி செய்து, நடப்பாண்டில் சிறந்த முடிவுகளை தருவோம்.

இம்முறையும் எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மூன்று தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மாணவர்கள் தேர்வுக்கு தயாராவது குறித்து, அவர்களின் பெற்றோர்களுடன் அந்தந்த பள்ளிகளில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

குடியிருப்பு பள்ளிகள் நல்ல முடிவுகளை பதிவு செய்திருந்தன. மாவட்டத்தில் சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் பிற துறைகளை சேர்ந்த 25 உறைவிட பள்ளிகள் உள்ளன.

இதன் தேர்ச்சி, 2024ல் 94.6 சதவீதமாகும். தேர்வு எழுதிய 1,163 மாணவர்களில் 1,101 பேர் தேர்ச்சி பெற்றனர். இப்படி இருக்கும் போது, மற்ற அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் நல்ல முடிவுகளை அடைய ஏன் முடியாது.

19,400 பேர்



எஸ்.எஸ்.எல்.சி. ஆண்டுத் தேர்வு மார்ச் 21ம் தேதி துவங்குகிறது. இம்முறை 19,400 மாணவர்கள் தேர்வு எழுதுவர்.

முதற்கட்ட தேர்வு முடிவுகளை பார்க்கும் போது 4,000 பேர் மட்டுமே சராசரியாக தேர்ச்சி பெறலாம் என்று தெரிகிறது. இதற்காகவே பயிற்சியை கடினமாக்கி உள்ளோம்.

கடந்த 2021- - 22ம் ஆண்டில், 94.53 சதவீத முடிவுகளுடன் கோலார் ஆறாவது இடத்தில் இருந்தது.

2022- - 23ம் ஆண்டில், 93.75 சதவீத முடிவுகளுடன் ஆறாவது இடத்திலேயே இருந்தது. இம்முறை ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறோம்.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளை அதிகரிப்பதில் நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

மாணவர்களை கண்காணித்து நல்ல அறிவுரைகளை வழங்கி உள்ளோம். இம்முறை, முதல் 10 இடங்களுக்குள் வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement