போடியில் சின்னம்மை நோயால் 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

போடி : போடி பகுதியில் வைரஸ் கிருமி தொற்று காரணமாக சின்னம்மை நோயால் 50 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

போடி நகர் மற்றும் கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக சின்னம்மை, பொண்ணுக்கு வீங்கி, வாய் அம்மை, தட்டம்மை நோயால் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நோய் குடும்பத்தில் ஒருவரை பாதித்தால் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. அம்மை கொப்புளங்கள் உடைந்து நீர் வெளியேறும் போது அதில் உள்ள வைரஸ் கிருமி காற்று மூலம் மற்ற நபர்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் காய்ச்சல், களி,உடல்வலி, வயிற்று போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த நோய் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது.

போடி அரசு மருத்துவ அதிகாரி கூறுகையில் : வெப்பம் காரணமாகவும், சுகாதாமற்ற சூழல் உள்ள பகுதிகளில் வெரிசெல்லா ஜோஸ்டர் (Vericella Zoster) என்ற வைரஸ் கிருமியால் அம்மை நோய் வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த நோய் எளிதில் பரவும்.

அம்மை நோய் சளி, இருமல், தொடுதல், முத்தம் கொடுத்தல், தும்மல் காரணங்களால் மற்ற நபர்களுக்கு பரவுகிறது. அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பிறருக்கு பரவாமல் தடுக்க மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொண்ணுக்கு வீங்கி, தட்டம்மை, சின்னம்மை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றனர்.

Advertisement