அரசு ஊழியர்களை குறைக்க டிரம்ப் முயற்சி; கோர்ட் உத்தரவால் சிக்கல்
வாஷிங்டன்: அரசு ஊழியர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்யும், டிரம்பின் திட்டத்திற்கு, அமெரிக்கா கோர்ட் உத்தரவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில், பாதுகாப்புத்துறை, தபால் துறை தவிர்த்த பிற அரசு பணிகளில் 23 லட்சம் பேர் உள்ளனர். இத்தனை அரசு ஊழியர்கள் தேவையில்லை என்பது அதிபர் டிரம்ப் கருத்தாக உள்ளது. மீண்டும் பொறுப்பேற்றது முதல் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் டிரம்ப் நிர்வாகம், அரசு ஊழியர்களுக்கு இமெயில் மூலம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. இது அரசு ஊழியர்கள் தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்வதற்கான திட்டம் ஆகும்.
இந்த இமெயில், 20 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம், அரசு ஊழியர்களில் ஐந்து முதல் பத்து சதவீதம் பேர் பணியில் இருந்து விலகிக் கொள்வர் என்று அரசு எதிர்பார்க்கிறது. இவ்வாறு பதவியிலிருந்து தாமாகவே முன்வந்து விலகும் ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் வரை (8 மாதம்) சம்பளம் வழங்கப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முடிவெடுக்க பிப்ரவரி 6ம் தேதி வரை அவகாசமும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. தானாக முன்வந்து ராஜினாமா செய்யும் திட்டத்திற்கு 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கு, தற்காலிக தடை உத்தரவைக் கோரி, அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு ஊழியர் கூட்டமைப்பு மற்றும் பல தொழிற்சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன.
விசாரித்த நீதிமன்றம், தானாக முன்வந்து ராஜினாமா செய்யும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நேற்று என இருந்ததை வரும் திங்கட்கிழமை வரை தள்ளி வைத்துள்ளது. அன்று நடக்கும் விசாரணை முடிவில், டிரம்ப் திட்டத்துக்கு தடை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.