வங்கதேச வன்முறைக்கு இந்தியா கண்டனம்

4


புதுடில்லி: வங்கதேசத்தில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கு தீ வைத்தது உள்ளிட்ட வன்முறை சம்பவங்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.


வங்கதேச நிறுவனரும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு, போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் கட்சித் தலைவர்களின் வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

சிட்டகாங் மருத்துவக் கல்லுாரி, ஜமால் கான் பகுதி, ரங்பூர் ரோகிய பல்கலை உட்பட பல்வேறு இடங்களில் இருந்த அவரின் சுவரோவியங்கள் சிதைக்கப்பட்டன. ஒரு நாள் முழுதும் நீடித்த வன்முறை சம்பவங்களால், தலைநகர் டாக்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பதற்றம் நிலவுகிறது.


இது தொடர்பான ஊடகங்களின் கேள்விகளுக்கு, மத்திய வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை சக்திகளுக்கு எதிராக வங்கதேச மக்களின் வீரமிக்க எதிர்ப்பின் அடையாளமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வரலாற்று சிறப்புமிக்க இல்லம் அழிக்கப்பட்டது வருந்தத்தக்கது.

வங்கதேச அடையாளத்தையும் பெருமையையும் வளர்த்த சுதந்திரப் போராட்டத்தை மதிப்பவர்கள் அனைவரும், இந்த குடியிருப்பின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறார்கள். இந்த நாசகார செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement