வாரணாசி ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கும்பாபிஷேகம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849069.jpg?width=1000&height=625)
ஸ்ரீ சாரதா பீடாதீஸ்வர சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் நல்லாசியுடனும்,தெய்வீக கட்டளையுடனும் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் வாரணாசி விஜய யாத்திரை (ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை) பகவதி ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கும்பாபிஷேகம் (பிப்ரவரி 7, 2025)
***
இன்று 2025 பிப்ரவரி 7 ம் தேதி... வாரணாசி விழாக்கோலம் பூண்டுள்ளது.
தக்ஷிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடாதீஸ்வர சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் ஆசியுடன், அவரது வாரிசான உத்தராதிகாரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம், வாரணாசியில் பிரசித்தி பெற்ற ஜகன்மாதா ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி பகவதி கோவிலுக்கு கும்பாபிஷேகத்தை இன்று நடத்தி வைக்கிறார்.
தெய்வீக பிரசன்னம்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், 48 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சிருங்கேரி சங்கராச்சாரியார் வருகை தந்து, ஜனவரி 24 முதல் 31 வரை கும்பமேளாவில் பங்கேற்று தனது தெய்வீகப் பிரசன்னத்தால் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர், ஜனவரி 31ம் தேதி மாலை வாரணாசி வந்தடைந்தார். இங்கு பக்தர்கள் மற்றும் அறிஞர்கள் ஜகத்குருவுக்கு பக்தி பரவசத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஸ்ரீ பரமசிவன் அவதாரமான, சனாதன வேத தர்மத்தை உயிர்ப்பித்த ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் ஆன்மிக வாழ்க்கைக்கும், நமது சனாதன வைதிக தர்மத்தின் புண்ணிய பூமியான வாரணாசிக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத தொடர்பை, அனைத்து விசுவாசிகளும் நன்கு அறிவர்.
சங்கர திக்விஜயம்
வாரணாசியில் தான், ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் பகவான் ஸ்ரீ விஸ்வநாதரையும், மகரிஷி வேத வியாசரையும் பிரத்யக்ஷ தரிசனம் செய்தார். ஜகத்குரு வாரணாசியில் இருந்தபோது, ஸ்ரீ பத்மபாதாச்சார்யா போன்ற பல சீடர்கள், அவரிடம் அடைக்கலம் தேடினர்.
ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் நிறுவிய, நான்கு ஆம்னாய பீடங்களில் ஒன்றான, புகழ்பெற்ற தக்ஷிணாம்ய சிருங்கேரி சாரதா பீடத்தின், 12வது ஆச்சாரியரான ஜகத்குரு ஸ்ரீ வித்யாரண்ய மஹாஸ்வாமிஜி எழுதிய, 'சங்கர திக்விஜயத்தில்' இந்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
தென்னிந்தியாவில் நமது சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதில் முதன்மை பங்காற்றியது விஜயநகரப் பேரரசு என்பது வரலாறு. இந்த பேரரசை நிறுவுவதில், ஜகத்குரு ஸ்ரீ வித்யாரண்ய மஹாஸ்வாமிஜி அவர்கள், முக்கியப் பங்காற்றினார்.
சந்திரமவுலீஸ்வர பிரதிஷ்டை
நான்கு வேதங்களின் புகழ்பெற்ற பண்டிதரும், பஞ்சதசி மற்றும் ஜீவன்முக்தி விவேகம் போன்ற வேத நுால்களை இயற்றியவருமான ஜகத்குரு ஸ்ரீ வித்யாரண்யர், 14ம் நூற்றாண்டில் வாரணாசிக்கு விஜயம் செய்து, பகவான் ஸ்ரீ விஸ்வநாதரையும் மகரிஷி வேத வியாசரையும் தரிசனம் செய்து, கேதார்ஹத்தி மடத்தின் முதல் கிளையை நிறுவினார்.
இந்த கிளை மடத்தில், 12வது ஆச்சார்யா பகவான் ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரரை பிரதிஷ்டை செய்தார். அவர் இன்றும் அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதித்து வருகிறார்.
32வது சங்கராச்சாரியார், ஜகத்குரு ஸ்ரீ நரசிம்ம பாரதி மஹாஸ்வாமிஜி சந்நியாசத்திற்கு, முன்னும் பின்னும் பலமுறை வாரணாசிக்கு விஜயம் செய்துள்ளார்.
................................
சிருங்கேரி சங்கராச்சாரியார் பாதுகைகளின் தெய்வீக ஆசியுடன் பனாரஸ் பல்கலை கழகம்
சிருங்கேரி தக்ஷிணாம்ய ஸ்ரீ சாரதா பீடத்தின், 33வது ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி மஹாஸ்வாமிஜி அவர்கள். இவர் ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் காலம் வரை நீடித்த, ஜகத்குருக்களின் பரம்பரையில் இருந்து வந்தவர். ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் பிறப்பிடமான காலடியை மீண்டும் கண்டுபிடித்ததற்காகவும், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் முதல் முழுமையான படைப்புகளை, 'ஷங்கர கிரந்தவலி' என்ற தலைப்பில் கொண்டு வந்ததற்காகவும் அவர் போற்றப்பட்டார்.
அவரது வாழ்க்கைக்கும் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் வாழ்க்கைக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமை காரணமாக, அவர் பெரிய குருவின் மறுபிறவி என்று பரவலாகக் கருதப்பட்டார்.
தெய்வீக நிகழ்வு
20ம் நுாற்றாண்டின் முற்பகுதியில், பண்டிட் மதன் மோகன் மாளவியா வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அடித்தளத்தை அமைப்பதற்கு, சங்கராச்சாரியாரின் ஆசீர்வாதத்தை நாடினார். மஹாஸ்வாமிஜிக்கு இவ்வளவு தூரம் பயணிக்க போதுமான நேரம் இல்லாத காரணத்தால் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை. இருப்பினும், ஒரு தெய்வீக செயலாக, அவர் தனது மரியாதைக்குரிய குருவான ஜகத்குரு சங்கராச்சாரியா ஸ்ரீ நரசிம்ம பாரதி மஹா ஸ்வாமிஜியின் புனித பாதுகைகளை, அடிக்கல் நாட்டு விழாவுக்கு அனுப்பினார்.
சிருங்கேரி சங்கராச்சாரியாரின் தெய்வீக ஆசீர்வாதத்தை குறிக்கும் இந்த வரலாற்று நிகழ்வு, பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட பனாரஸ் இந்து பல்கலைக்கழக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று, புனித குரு பாதுகாக்கள் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, பாரத் கலா பவன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆன்மீக முக்கியத்துவத்துடன், இந்த பாதுகாக்கள் அனைத்து தலைமுறையினருக்கும் ஒரு உத்வேகம் அளிக்கின்றன.
ஜீவன் முக்தா
34வது சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகள், ஜீவன்முக்தா என்ற புகழ் பெற்றவர். இவர் மகாமஹோபாத்யாய ராஜேஷ்வர் திராவிட் அவர்களின், ஸ்ரீ வல்லப பிரம்மா சாலிகிராம சங்க வேத வித்யாலயாவுக்கு தனது முழு ஆதரவு மற்றும் அருளை வழங்கியிருந்தார். அவர் 'கங்கா ஸ்தவா' என்ற பாடலை இயற்றினார். இது கங்கை நதியின் புனிதம் மற்றும் பெருமைகளைக் கொண்டாடும், ஒரு தனித்துவமான படைப்பாகும். இவ்வாறு, தட்சிணாம்நாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்துக்கும், புனித வாரணாசிக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரிடம் இருந்து தொடங்கியது.
இன்று மஹா கும்பாபிஷேகம்
கடந்த 1977ம் ஆண்டில், வாரணாசி தேவி அன்னபூர்ணா கோவிலின் கும்பாபிஷேகத்தை சிருங்கேரி சாரதா பீடத்தின் 35 வது சங்கராச்சாரியார் அனந்தஸ்ரீ விபூஷித ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மஹாஸ்வாமிஜி நடத்தினார். தற்போதைய சங்கராச்சாரியார் அனந்தஸ்ரீ விபூஷித ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாஸ்வாமியும் அவருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்தினார்.
கடந்த 1994ல், தனது அகில பாரத விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக, ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாஸ்வாமி வாரணாசி வருகை தந்து, மனித குலத்தின் நலனுக்காக பகவான் ஸ்ரீ காசி விஸ்வநாதரை வழிபட்டார். வேத சபைகள், சாஸ்திர சபைகள் போன்ற பல தர்ம நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் வாரணாசியில் அன்னபூரணி தேவிக்கு, மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
கோடி குங்கும அர்ச்சனை
வாரணாசி அன்னபூர்ணா மந்திரின் மஹந்த், ஸ்ரீ சங்கர்புரி மஹராஜ், சிருங்கேரிக்கு விஜயம் செய்து, ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாஸ்வாமிஜியிடம் கும்பாபிஷேகத்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டார். அனைத்து சீடர்கள் மீதும் அபரிமிதமான கருணை கொண்ட ஜகத்குரு, தனது உத்தராதிகாரி ஜகத்குரு சங்கராச்சாரியா ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமிஜியை கும்பாபிஷேகம் நடத்தும்படி வழிநடத்தினார்.
அதன்படி, 37வது சங்கராச்சாரியார், அனந்தஸ்ரீ விபூஷித ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமிஜி, தற்போது வாரணாசியில் அன்னபூரணி தேவியின் பிராணபிரதிஷ்டம் மற்றும் மஹாகும்பாபிஷேகம் மற்றும் விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை நடத்த உள்ளார்.
பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் ஒரு வாரம் தெய்வீக பிரசன்னத்திற்குப் பிறகு இப்போது வாரணாசி க்ஷேத்திரத்தை வந்தடைந்துள்ள அவர், சிருங்கேரி சாரதா பீடாதிபதிக்கு விசேஷ பிரசாதமாக புதிதாக கட்டப்பட்டுள்ள தங்க சிகர கோபுர கும்பாபிஷேகத்தையும் தனது அமிர்த கரங்களால் நடத்துவார்.
ஆயுத மோதக கணபதி ஹோமம், சஹஸ்ரசண்டி மஹா யஜ்ஞம், கோடி குங்கும அர்ச்சனை, மஹாருத்ர மஹாயஜ்ஞம், சதுர்வேத பாராயணம், மற்றும் லோக கல்யாண பாராயணம் உட்பட பல புனிதமான தர்ம நிகழ்வுகளில், நாடு முழுவதிலும் இருந்து, 485 வேத பண்டிதர்கள், மற்றும் ஆன்மிக பெரியோர், திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
பக்தர்களுக்கு அழைப்பு
வாரணாசி விஜய யாத்திரைக்குப் பின், ஜகத்குரு சங்கராச்சாரியார், புனித அயோத்தியில் பகவான் ஸ்ரீராமச்சந்திரரை தரிசனம் செய்து, கோரக்பூரில் அவரது யாத்திரையை நிறைவு செய்வார்.
வாரணாசி மற்றும் இதர புனிதத் தலங்களில் ஜகத்குருவின் விஜய யாத்திரையின்போது, அவரது தரிசனத்தைப் பெற்று, பகவான் ஸ்ரீ விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஆகியோரின் கருணையைப் பெறுவதற்கு பக்தர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
ஸ்ரீ சாரதா பீடாதீஸ்வர சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் நல்லாசியுடனும்,தெய்வீக கட்டளையுடனும் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் வாரணாசி விஜய யாத்திரை (ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை) பகவதி ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கும்பாபிஷேகம் (பிப்ரவரி 7, 2025)
https://sringeri.net/stotras/devistotrani/annapurnastutih