16 ஆண்டில் கோவை மக்கள் கொடுத்தது ரூ.492 கோடி! நகர வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்க எதிர்பார்ப்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849070.jpg?width=1000&height=625)
கோவை; கோவையில், கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன், உள்கட்டமைப்பு, அடிப்படை வசதி கட்டணம் மற்றும் உள்ளூர் திட்ட குழும கணக்கில், பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவ்வகையில், 2007 முதல், 2023 வரை, 492 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்நிதி, பல்வேறு அரசு துறை திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதேநேரம், திட்டச்சாலைகள் உருவாக்குவது உள்ளிட்ட, நகர வளர்ச்சி திட்டங்களுக்கு நகர ஊரமைப்புத்துறை ஒதுக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
சில திட்டங்களை செயல்படுத்த மத்திய - மாநில அரசுகள் நிதி அளித்தாலும் கூட, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பும் அவசியமாகிறது. அதை கருத்தில்கொண்டு, நகர்ப்புற பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டும்போது, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கென, நகர ஊரமைப்பு துறையால், குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. இச்சட்டம், 2007 முதல் அமலில் இருக்கிறது.
இதன்படி, கோவையில் மனைப்பிரிவு உருவாக்குவது, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது, வணிக வளாகம் கட்டுவது உள்ளிட்ட எந்தவொரு பணியாக இருப்பின், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு வசூலிக்கப்படும் நிதி, ஒரே கணக்கில் சேர்க்கப்பட்டு, பல்வேறு துறைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இவ்வாறு, கோவை மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம் மூலம், 2007 முதல், 2023 வரை பொதுமக்களிடம் இருந்து வசூலித்த உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி கட்டணம் மற்றும் உள்ளூர் திட்ட குழும கணக்கில் பெறப்பட்ட தொகை எவ்வளவு என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் தியாகராஜன் தகவல் கோரியிருந்தார். அதற்கு, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி கட்டணமாக, 429 கோடியே, 29 லட்சத்து, 71 ஆயிரத்து, 054 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் திட்ட குழும கணக்கில், 62 கோடியே, 74 லட்சத்து, 23 ஆயிரத்து, 211 ரூபாய், 60 காசுகள் வசூலாகியுள்ளதென, பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
இத்தொகை, நகர ஊரமைப்புத்துறை கணக்கில் உள்ளது. நகர அபிவிருத்திக்காக, அரசு துறைகள் கருத்துரு சமர்ப்பித்தால், நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், கோவை நகர வளர்ச்சிக்கு நிதி கேட்டு கருத்துரு அனுப்பினால், ஏதேனும் காரணங்கள் கூறி, கிடப்பில் போடப்படுகின்றன. ஏனெனில், 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோவையில் நடத்தப்பட்ட முதல் அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, ஏழு வழித்தடங்களில் திட்டச்சாலைகள் உருவாக்க, அடிக்கல் நட்டாார்.
உள்ளூர் திட்ட குழும நிதியில் ரூ.111 கோடி கேட்டு நகர ஊரமைப்புத்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. நிதி ஒதுக்காததால், திட்டச்சாலைகள் உருவாக்கப்படவே இல்லை. அதன் பின், முதல்கட்டமாக, மூன்று திட்டச்சாலைகள் மட்டும் உருவாக்க ஆய்வு செய்யப்பட்டது; ரூ.20 கோடி ஒதுக்காததால், கிடப்பில் போடப்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன், தண்ணீர் பந்தல் 'எஸ்' பெண்டு பகுதியை மேம்படுத்த உள்ளூர் திட்ட குழும நிதி கோரப்பட்டது. இதற்கும் நிதி ஒதுக்கவில்லை.
இச்சூழலில், சத்தி ரோடு விரிவாக்கத்துக்கு ரூ.54 கோடி, காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டை புதுப்பித்து நவீன முறையில் கட்டுவதற்கு ரூ.30 கோடி கேட்டு, நகர ஊரமைப்புத்துறைக்கு மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது. அதனால், நகர மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கேட்கும் நிதியை ஒதுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
மேலும்
-
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாக்., யாத்ரீகர்கள் 68 பேர்!
-
சந்திரயான்-4 விண்கலம் 2027ல் விண்ணில் பாயும்!
-
மோசடி வழக்கு; நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பிடிவாரன்ட்
-
மர்மம் விலகியது; கேரளாவில் 3 புலிகள் உயிரிழப்புக்கு காரணம் இதுதான்!
-
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் கைது; இ.பி.எஸ்., கண்டனம்
-
அரசு ஊழியர்களை குறைக்க டிரம்ப் முயற்சி; கோர்ட் உத்தரவால் சிக்கல்