மகன் திருமணத்தால் மகிழ்ச்சி: ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை அளிக்கும் அதானி

5


புதுடில்லி: பிரபல தொழிலதிபர் அதானியின் மகன் ஜீத் அதானியின் திருமணம் இன்று நடந்தது. இதனை முன்னிட்டு சமூக சேவைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை அளிப்பதாக அதானி அறிவித்து உள்ளார்.


இந்தியாவின் 2வது கோடீஸ்வரரான பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி. இவரது இளைய மகன் ஜீத் அதானி. இவருக்கும் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஜெயின்ஷாவின் மகள் திவாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.திருமண சடங்குகள் ஆமதாபாத்தில் உள்ள சாந்திகிராம் நகரில் கடந்த 5ம் தேதி துவங்கியது. ஹிந்து மற்றும் ஜெயின் முறைப்படி சடங்குகள் நடந்தன. இன்று மாலை இருவரின் திருமணம் நடந்தது. இதில், அதானியின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணம் தொடர்பாக அதானி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடவுளின் ஆசிர்வாதத்தால் ஜீத் மற்றும் திவாவின் திருமணம் இன்று நடந்தது. ஆமதாபாத்தில் பாரம்பரிய முறைப்படி நடந்தது. இந்நிகழ்ச்சி சிறிய மற்றும் தனிப்பட்ட முறையில் நடந்ததால், நலன் விரும்பிகளை அழைக்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அனைவரிடம் இருந்தும் ஜீத் மற்றும் திவாவிற்கு அன்பையும், ஆசிர்வாதத்தையும் வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அதானி கூறியுள்ளார்.

நன்கொடை



மேலும் மகனின் திருமணத்தை முன்னிட்டு ரூ.10 ஆயிரம் கோடி நிதியை நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் பெரிய அளவிலான கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில், தரமான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகள் நிறுவுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திருமணத்திற்கு முன்பு மாற்றுத்திறனாளி பெண்கள் 21 பேருக்கு அதானி சார்பில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் கலந்து கொண்ட ஜீத் அதானி, ஒவ்வொரு ஆண்டும் 500 மாற்றுத்திறனாளி பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் திருமணம் செய்து வைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

Advertisement