இந்தியாவை எதிர்மறையாக சித்தரிப்பதா: வங்கதேசத்திற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849268.jpg?width=1000&height=625)
புதுடில்லி: '' உள்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு இந்தியாவை குறை சொல்லி எதிர்மறை பிம்பத்தை உருவாக்குவது வருத்தத்திற்குரியது,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டம் காரணமாக, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். அவர் நம் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஆன்லைன் வாயிலாக தொண்டர்களுடன் ஷேக் ஹசீனா பேசினார். அப்போது, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த அவர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் பரவியதும் மாணவர் அமைப்பினர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், வங்கதேச நிறுவனரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டு தரைமட்டமானது. இதனால், அந்நாட்டில் பதற்றம் நிலவுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்த ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில், நான் நாட்டுக்காக எதையும் செய்யவில்லையா? பிறகு எதற்காக என்னை இப்படி அவமதிக்க வேண்டும். என் தந்தையின் நினைவாக இருந்த ஒரே வீட்டையும் அழித்து விட்டனர். இதற்கு பின்னால் யார் இருக்கின்றனர். ஏன் இந்த தொடர் தாக்குதல்? அடையாளங்களையும் கட்டமைப்புகளையும் அழிக்கலாம். ஆனால், வரலாற்றை அழிக்க முடியாது. நிச்சயம் இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டாக்காவில் செயல்படும் இந்திய தூதரகத்தில் உள்ள அதிகாரியிடம் வங்கதேச வெளியுறவு அமைச்சகம் அளித்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் தங்கியிருப்பதாக கூறப்படும் ஷேக் ஹசீனாவின் தவறான மற்றும் புனையப்பட்ட கருத்துகளாலேயே வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் தலைதூக்கி உள்ளன. அவரது பேச்சு மற்றும் அறிக்கைகள் எங்கள் நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்துகின்றன. இது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆரோக்கியமான உறவுகளுக்கு உகந்தவை அல்ல. எனவே, அங்கிருந்தபடி, இதுபோன்ற பேச்சுகளை ஷேக் ஹசீனா வெளியிடுவதை தடுக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்தியாவுக்கான வங்கதேச தூதர் முகமது நூரல் இஸ்லாமிற்கு வெளியுறவு அமைச்சகம் இன்று(பிப்.7) மாலை 5:00 மணிக்கு சம்மன் அனுப்பி வரவழைத்தது. அப்போது, வங்கதேசத்துடன், ஆக்கப்பூர்வமான, நேர்மறையான மற்றும் பரஸ்பரம் நலன் பயக்கும் உறவுகள் ஏற்படுவதையே இந்தியா விரும்புகிறது. இதனை பல சந்திப்புகளின் போது கூறியுள்ளோம். ஆனால், உள்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு எங்களை பொறுப்பாக்கும் வகையில், இந்தியாவை எதிர்மறையாக சித்தரிக்கும் வகையில், வங்கதேச அதிகாரிகள் கருத்து வெளியிடுவது என்பது வருத்தத்திற்குரியது.
வங்கதேசத்தின் தொடர்ச்சியான அறிக்கைகளே எதிர்மறை எண்ணத்தை உருவாக்குகிறது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியது முற்றிலும் அவரின் தனிப்பட்ட கருத்து. அதில், இந்தியாவுக்கு எந்த பங்கும் இல்லை. இதனை இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் இணைப்பது இரு தரப்பு உறவுக்கு உதவாது.
பரஸ்பர நலன் பயக்கும் வகையில் உறவை ஏற்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்கும் வேளையில், வங்கதேசமும் அதனை கெடுக்காத வகையில், பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.
![subramanian subramanian](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![தர்மராஜ் தங்கரத்தினம் தர்மராஜ் தங்கரத்தினம்](https://img.dinamalar.com/data/uphoto/298176_195749137.jpg)