தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு முடிவுக்கு வந்தது நீண்டகால இழுபறி திட்டம்

சென்னை:தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம், 15 ஆண்டுகளுக்கு பின் முழுமை பெற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில், ஆண்டுதோறும் 13.7 டி.எம்.சி., நீர், வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீரில், 2.76 டி.எம்.சி., நீரை வறட்சியான கருமேனியாறு, நம்பியாறு ஆறுகளுக்கு, கெனடியன் கால்வாய் வழியாக கொண்டு செல்லும் திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு, 369 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, 2009ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம் என, இதற்கு பெயர் சூட்டப்பட்டது.

இத்திட்டம் நிறைவேறினால், திருநெல்வேலி மாவட்டத்தில், 32 கிராமங்களில் உள்ள 177 ஏரிகள், 2,657 கிணறுகள் பயன்பெறும். துாத்துக்குடி மாவட்டத்தில், 18 கிராமங்களில் 75 ஏரிகள், 2,563 கிணறுகள் பயன்பெறும். நான்கு கட்டடங்களாக, இத்திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

நிலம் கையகப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தாததால், அ.தி.மு.க., ஆட்சியில் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. திட்ட மதிப்பீட்டு தொகையும் 1,023 கோடி ரூபாயாக உயர்ந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும் வழக்கு காரணமாக, மொத்தமுள்ள 75.1 கி.மீ., கால்வாயில், 73.5 கி.மீ.,க்கு மட்டுமே பணிகள் முடிந்தன. தற்போது எஞ்சிய, 1.64 கி.மீ., பணிகள் முடிக்கப்பட்டு, திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். கருணாநிதி ஆட்சியில் துவங்கிய இத்திட்டம், அரசியல் மற்றும் வழக்கு காரணங்களால், 15 ஆண்டுகளுக்கு பின் முழுமை பெற்றுள்ளதால், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இத்திட்டத்திற்கு, மத்திய அரசும் 44 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு கால்வாயில் நீர் திறக்கப்பட்டு, வெள்ளோட்டம் நடந்தது. இனிவரும் பருவமழை காலங்களில், இந்த கால்வாய் வழியாக, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளுக்கு நீர் செல்லவுள்ளது.

Advertisement