நகராட்சி கமிஷனரிடம் வியாபாரிகள் முறையீடு

பல்லடம்; பல்லடம் நகராட்சி, தினசரி மார்க்கெட்டில், 48 கடைகளுடன் புதிய வணிக வளாகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கு கடை நடத்தி வரும் சிலர், வாடகை பாக்கி வைத்துள்ளதாக கூறி, நகராட்சியினர், அக்கடைகளுக்கு சீல் வைத்தனர்.

இதுதொடர்பாக வியாபாரிகள், கமிஷனரை சந்தித்து முறையிட்டனர். அவர்கள் கூறியதாவது:

கடை ஒன்றுக்கு, 1.30 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் செலுத்தி உள்ளோம். பழைய கடைகள் இடிக்கப்பட்டு, புதிதாக, 48 கடைகள் கட்டப்பட்ட நிலையில், இவற்றுக்கும் புதிதாக அட்வான்ஸ் தொகை பெறப்பட்டது. ஒவ்வொரு கடைக்கும், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்க கடைக்கு சீல் வைக்கலாமா? கடைக்குள் உள்ள காய்கறிகள், மளிகை பொருட்களும் கெட்டுவிடும். அட்வான்ஸ் தொகையில் இருந்து வாடகை பாக்கியை கழித்து, மீதி தொகையை எங்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வியாபாரிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் மனோகரன், இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Advertisement