டில்லி தேர்தலில் கெஜ்ரிவால், சிசோடியா தோல்வி

7


புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தோல்வி அடைந்தனர்.


டில்லி சட்டசபை தேர்தலில், புது டில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஷீலா திட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சித் ஆகியோர் களம் இறங்கினர்.

இந்த தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் பர்வேஷ் வர்மா 30,088 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். கெஜ்ரிவால் 25,999 ஓட்டுக்கள் பெற்றார். கடைசி சுற்று முடிவில், 4,089 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் தோல்வி அடைந்தார்.

இந்த தொகுதியில் மூன்றாமிடம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித், 4,568 ஓட்டுகளை பெற்று, அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டார். தன் தாயார் ஷீலா தீட்சித்தை, அதே தொகுதியில் நேருக்கு நேராக நின்று தோற்கடித்த கெஜ்ரிவாலை, சந்தீப் தீட்சித் பழி வாங்கி விட்டதாக, நெட்டிசன்கள் கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சிசோடியா தோல்வி



ஜங்புரா தொகுதியில், ஆம்ஆத்மி சார்பில், மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிட்டார். பா.ஜ., சார்பில் கர்தார் சிங் தன்வார் போட்டியிட்டார். இந்த தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் கர்தார் சிங் தன்வார் 38,859 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். மணீஷ் சிசோடியா 38,184 ஓட்டுக்கள் பெற்று, 675 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.



கடந்த 2013, 2015, 2020ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் புதுடில்லி தொகுதியில் 3 முறை களமிறங்கி வெற்றி பெற்று கெஜ்ரிவால் முதல்வரானார். இப்போது 4வது முறையாக அவர் புதுடில்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.


தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்து இருப்பது கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


அதிஷி வெற்றி



அதேநேரத்தில், கல்காஜி தொகுதியில் தற்போதைய டில்லி முதல்வர், அதிஷி ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும், பா.ஜ., சார்பில் முன்னாள் எம்.பி., ரமேஷ் பிதூரியும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில், அதிஷி 52,058 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இவர் எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் பிதூரி 48,478 ஓட்டுக்கள் பெற்றார். கடைசி சுற்று முடிவில், அதிஷி 3,580 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisement