ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி: சிசு உயிரிழந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி

2

வேலூர்: வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரை சேர்ந்த 25 வயது பெண், வீட்டிலேயே டெய்லரிங் வேலை செய்து வருகிறார். நான்கு மாத கர்ப்பிணியாக உள்ள அவர், ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த மங்கள சமுத்திரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதற்காக கோவை திருப்பதி இடையே செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் மகளிருக்கான பெட்டியில் நேற்று முன்தினம்( பிப்.,08) பயணித்தார். ஜோலார்பேட்டை ஸ்டேசன் வந்த உடன், சக பெண் பயணியர் இறங்கிவிட்டனர். கர்ப்பிணி மட்டும் தனியாக பயணித்தார். அப்போது வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ், கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால், அந்த பெண் கூச்சலிட்டார். இதனால், அவரை ஹேமராஜ் சரமாரியாக தாக்கியதுடன் பலாத்காரம் செய்ய முயன்றார். தப்பிக்க முயன்ற அப்பெண்ணின் தலைமுடியை பிடித்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.

இதில் அப்பெண்ணுக்கு கை கால் முறிந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பெண், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஹேமராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி.,க்கு தேசிய மகளிர் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில்,அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement