டில்லியின் புதிய முதல்வர் யார்; போட்டியில் 5 முக்கிய தலைவர்கள்

1

புதுடில்லி: டில்லியின் புதிய முதல்வர் யார் என்ற போட்டியில் பா.ஜ. முக்கிய தலைவர்கள் 5 பேரின் பெயர்கள் இருக்கின்றன.


@1brபெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புகளுக்கு இடையே தலைநகர் டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை மெய்யாக்கி, 27 ஆண்டுக்கு பின் பா.ஜ., ஆட்சியை பிடித்து இருக்கிறது.


மெஜாரிட்டிக்கும் (36 தொகுதிகள்) அதிகமான இடங்களை கைப்பற்றி அரியணையை பிடித்து இருப்பதால் பா.ஜ., முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். சொல்லியபடி வெற்றியை தனதாக்கிய பா.ஜ.,வில் இப்போது டில்லியின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


முதல்வராக யார் அமர போகிறார்கள் என்பதை கட்சியின் மத்திய தலைமை முடிவு செய்யும் என்று டில்லி பா.ஜ., தலைவர் சச்தேவ் என்று கூறி இருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், கட்சியினர் வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளனர். எங்கள் கட்சியின் உயர் தலைமைக்கு கிடைத்த முக்கிய வெற்றி. டில்லியில் நிலவும் மக்கள் பிரச்னைகளை மையமாக வைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.


வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் களைகட்டிய நிலையில் தலைநகர் டில்லியின் புதிய முதல்வர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதில் 5 நபர்கள் முன்னணியில் உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு;


பர்வேஷ் சாகிப் சிங் வர்மா:


மாஜி எம்.பி.,யான பர்வேஷ் சாகிப் சிங் வர்மா பா.ஜ.,வின் முக்கிய முகம். தேர்தலில் டில்லியின் 3 முறை முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்து அனைவர் கவனம் பெற்றவர். மாஜி டில்லி முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகன் என்பது கூடுதல் பிளஸ். கெஜ்ரிவாலின் வலிமையான ஓட்டு வங்கி மற்றும் மக்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை தேர்தலில் உடைத்தவர் என்ற பெயர் உண்டு.


விஜேந்தர் குப்தா;


டில்லி பா.ஜ., தலைவராக திறம்பட செயலாற்றியவர். கட்சியின் மூத்த தலைவர். ஆம் ஆத்மியின் கடும் போட்டிக்கு இடையிலும் 2015 மற்றும் 2020 தேர்தலில் ரோகிணி தொகுதியில் தொடர்ந்து வென்றவர். டில்லி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியவர். கட்சியின் சீனியர், அனுபவம் வாய்ந்தவர் என்ற அடிப்படையில் இவர் பெயர் பரிசீலனையில் உள்ளது.


மன்ஜிந்தர்சிங் சிர்சா;


ரஜௌரி கார்டன் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி வேட்பாளர் தன்வாட்டி சந்தேலாவை தோற்கடித்தவர். முதல்வர் ரேஸ் பட்டியலில் இவரது பெயர் முன்னணியில் இருக்கிறது.


துஷ்யந்த் கவுதம்;


இவர் பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் மற்றும் கட்சியின் தலித் தலைவர். பா.ஜ., முதல்வர் போட்டியில் இவரும் முன்னணியில் உள்ளார். கட்சியின் தொண்டர்கள் ஆதரவு கொண்ட இவர், முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்பது சீனியர்கள் கருத்தாக உள்ளது.


ஹரிஷ் குரானா;


மோதி நகர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷிவ்சந்திரன் கோயலை தோற்கடித்தவர். 1993ம் ஆண்டுமுதல் 1996ம் ஆண்டு வரை டில்லியின் முதல்வராக இருந்த பா.ஜ., மூத்த தலைவர் மதன்லால் குரானாவின் மகன். டில்லி பா.ஜ., அணியின் செயலாளராக உள்ளவர். கட்சியின் செய்தித்தொடர்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர்.

Advertisement