நீர்நிலை மீட்க கோரி 'தவளையிடம் மனு'

1

பொங்கலுார்: அவிநாசி முதல் அவிநாசி பாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை (என்.எச்., 381) 31.8 கிலோமீட்டர் நீளமுடையது.

இதன் குறுக்கே பொங்கலுார் வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு சுங்கம் வசூலிக்கப்படுகிறது. நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்ட சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.


நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டடம் கலெக்டர் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தில் குளம் வெட்டி தர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.


அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இந்து பரிவார் கூட்டமைப்பு சார்பில் நேற்று வேலம்பட்டி சுங்கச்சாவடியில் தவளையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. அவர்கள் திட்டமிட்டபடி தவளையிடம் மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.


இதில் பாரத மாதா இந்து மக்கள் இயக்க தலைவர் சாய்குமரன், சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, இந்து பரிவார் கூட்டமைப்பு தலைவர் சசிமான், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement