தாங்கள் பயிரிட்ட நெல்லை தானம் செய்யும் மாணவர்கள்

இன்றைய காலத்தில், நகர்ப்புற மாணவர்களுக்கு சவால் விடும் வகையில், கிராமப்புற மாணவர்கள் திறமைசாலிகளாக விளங்குகின்றனர். படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டு உட்பட பாடங்கள் சாராத விஷயங்களிலும் சாதிக்கின்றனர்.

ஒரு காலத்தில் அரசு பள்ளிகள் என்றால் முகம் சுளிப்பர். இங்கு தரமான கல்வி கிடைக்காது. அடிப்படை வசதிகள் இருக்காது என, பெற்றோர் நினைக்கின்றனர். இதனால் தாங்கள் கடனாளி ஆனாலும் கவலை இல்லை என, கருதி பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இவர்கள் நினைப்பது போன்று, அரசின் பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்பது உண்மைதான்.

சாதிப்பு



ஆனால் சில பள்ளிகளில், ஆசிரியர்களின் முயற்சியால், அரசு பள்ளிகளின் மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களை போன்று படிப்பில், விளையாட்டில், பாடங்கள் சாராத விஷயங்களில் சாதிக்கின்றனர். அது மட்டுமின்றி தோட்டக்கலை மற்றும் விவசாயத்திலும் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியான விஷயமாகும். இத்தகைய பள்ளிகளில், பெல்தங்கடி பள்ளியும் ஒன்றாகும்.

தட்சிணகன்னடா பெல்தங்கடியில் தொண்டு அமைப்பு ஒன்று, விவசாயத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. லாபகரமான தொழில் இல்லை, நியாயமான விலை கிடைப்பது இல்லை என, கருதி இளைஞர்கள் பலரும் விவசாயத்துக்கு முழுக்கு போட்டு, வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். பிழைப்பு தேடி, பிறந்து, வளர்ந்த ஊரை விட்டு விட்டு, வேறு இடங்களுக்கு குடிபெயர்கின்றனர்.

இந்த நிலையை மாற்றி இளைஞர்களுக்கு விவசாயத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. மாணவர் பருவத்தில் இருந்தே, விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. பெல்தங்கடியின் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துகிறது. பெளாலு அருகில் அனந்தோடி அனந்த பத்மநாபர் கோவில் அருகில், பாழடைந்து கிடந்த ஐந்து ஏக்கர் அரசு நிலத்தை பதப்படுத்தி, மாணவர்களை ஊக்கப்படுத்தி, தேவையான வசதிகளை செய்து, விவசாயத்தில் ஈடுபடுத்தியது.

அமோக விளைச்சல்



மாணவர்களும் ஆர்வத்துடன் நெல் பயிரிட்டனர். படிப்பையும் விடாமல், பயிரை உரம் போட்டு, தண்ணீர் பாய்ச்சி பராமரித்தனர். பள்ளியின் 1,000 மாணவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. நெல் அமோகமாக விளைந்துள்ளது. கிராமத்தினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இன்று அறுவடை நடக்கவுள்ளது. இவர்களுக்கு கிராமத்தின் இளைஞர்களும் உதவியாக உள்ளனர். நெல்லை கோவிலுக்கும், வைக்கோலை கோசாலைக்கும் தானம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, தொண்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறியதாவது:

விவசாயத்தில் இருந்து இளம் தலைமுறையினரை, மீண்டும் விவசாயத்துக்கு திருப்ப எங்கள் அமைப்பு முயற்சிக்கிறது. இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். இதன் மகத்துவம் அவர்களுக்கு புரிய வேண்டும். இதை மனதில் கொண்டு, மாணவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தினோம். ஐந்து ஏக்கர் நிலத்தில், நெல் பயிரிட்டனர்.

நெல் நன்றாக விளைந்துள்ளது. இன்று, அறுவடை நடக்கும். கோவில் வளாகத்தில் நெல்லில் இருந்து, அரிசியை தனியாக பிரித்து, கோவிலில் நைவேத்தியம் மற்றும் அன்னதானத்துக்கு வழங்கப்படும்.

இதில் இருந்து வைக்கோல் கோசாலைகளுக்கு தானம் செய்யப்படும்.

விவசாயம் மட்டுமின்றி, அரசு பள்ளிகளில், துாய்மைப்படுத்துவது, பழுது பார்ப்பது உட்பட பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொள்கிறோம். எங்களுடன் வெவ்வேறு அமைப்புகள் கை கோர்க்கின்றன. இதில் மாணவர்களும் பங்கேற்கின்றனர்.


இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement