24 ஆண்டாக தெருவை சுத்தம் செய்யும் 83 வயது முதியவர்

பொதுவாக ஓய்வு பெற்றவர்கள், தங்கள் பேரக்குழந்தைகளுடன் பொழுதை போக்குவது அல்லது ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு மனைவியுடன் சென்று வருவர்.

ஆனால், பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே- - அவுட்டில் வசிக்கும் சூரியநாராயணன், 83, தான் வசிக்கும் பகுதி சாலையை சுத்தம் செய்வது மட்டுமின்றி, மரக்கன்றுகளும் நட்டு வருகிறார். இதை ஒரு நாள், இரண்டு நாட்களாக செய்யவில்லை. தொடர்ந்து ஓய்வு இல்லாமல், 24 ஆண்டுகளாக செய்து வருகிறார்.

சுத்தம்



அதுமட்டுமின்றி, மழைநீர் செல்லும் ஓடைகளில் தேங்கி நிற்கும் மண், காய்ந்த சரகுகளை அகற்றி வருகிறார். இதன் மூலம் இப்பகுதியை பசுமையாக மாற்றுவது மட்டுமின்றி, சுத்தமான பகுதியாக மாற்றி உள்ளார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த சூரியநாராயணன், இயற்கையால் சூழப்பட்டு வளர்ந்தவர். சுற்றுச்சூழலை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை அறிந்தவர். தனது ஆரம்பகாலத்தில் கற்றுக் கொண்ட இக்குணத்தால், ஓய்வு பெற்ற பின்னர், முழு நேர பணியாக மாற்றிக் கொண்டார்.

2001ல் ஓய்வு பெற்ற பின், தான் வசிக்கும் தெருக்களை சுத்தமாக வைத்திருக்க எண்ணிய அவர், காலையில் இரண்டு மணி நேரம் தானே தெருக்களை சுத்தம் செய்ய துவங்கினார். மழை நேரங்களில் பலர் வெளியே செல்ல தயங்கும் நேரத்திலும் கூட, வடிகாலில் தேங்கிய சேற்றை அகற்றி, நீர் தேங்குவதை தடுக்கிறார்.

ஆரம்பத்தில் அவரது மனைவி, நீங்கள் எதற்காக இதை செய்கிறீர்கள்' என்று கேட்டுள்ளார். அதற்கு சூரியநாராயணன், 'இதை எனக்காக செய்கிறேன். இதனால் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறியுள்ளார். இதை கேட்ட அவரது மனைவியும், கணவரின் விருப்பத்துக்கு தடை சொல்லாமல், அவரின் செயலுக்கு உறுதுணையாக நிற்கிறார். தினமும் சாலையை சுத்தம் செய்து வரும் பெங்களூரு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள், இவரின் செயலால், இத்தெருவை சுத்தம் செய்வதை தவிர்த்து, மற்ற தெருக்களில் சுத்தம் செய்து வருகின்றனர்.

மாற்றத்தின் விதை



அவரது அயராத அர்ப்பணிப்பு, அவரது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், சமூகத்தில் உள்ள மற்றவர்களையும் தங்கள் சுற்றுச்சூழலுக்கு சுத்தமாக வைத்திருக்க துாண்டி உள்ளது.

இதனால் அவரது தெருவை போன்று, மற்ற பகுதியில் வசிப்போர் தாங்கள் வசிக்கும் தெருக்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், மரக்கன்றுகளும் நட்டு வருகின்றனர்.

இது குறித்து சூரியநாராயணன் கூறியதாவது:

விவசாய குடும்பத்தில் பிறந்ததால், எனக்கு செடி வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் இருந்தது. ஓய்வுக்கு பின், இப்பகுதியில் குடியேறியபோது, துப்புரவு தொழிலாளர்கள், எப்போதாவது இத்தெருவை சுத்தம் செய்து வந்தனர். மழை காலங்களில் இத்தெரு இன்னும் மோசமாக இருந்தது.

எனக்கு ஏற்கனவே மரக்கன்று நடும் பழக்கமும் இருந்ததால், நானே தெருவையும், இருபுறமும் உள்ள மழைநீர் கால்வாயை சுத்தம் செய்ய துவங்கினேன்.

இதை கவனித்த துப்புரவு தொழிலாளர்கள், நானே தெருவை சுத்தம் செய்வதால், நாளடைவில் இங்கு வருவதை நிறுத்தி விட்டு, மற்ற தெருக்களில் சுத்தம் செய்ய துவங்கிவிட்டனர். சுத்தம் செய்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement