விபச்சாரத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எச்சரிக்கை! துணை போகும் போலீசாருக்கும் சிக்கல்

2

கோவை: 'மாநகரில் விபச்சாரம் செய்வோர் மற்றும் அதற்கு துணைபோகும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன் எச்சரித்துள்ளார்.


கோவை மாநகர பகுதிகளில் நட்சத்திர விடுதிகள், ஸ்பா, மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இதைக்கட்டுப்படுத்த துணை கமிஷனர்கள் தலைமையில் செயல்படும் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


எனினும் சில பகுதிகளில் விபச்சாரம் நடப்பது போலீசாருக்கு தெரிந்திருந்தும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக துணை கமிஷனர் தேவநாதனுக்கு தகவல் சென்றது.


மேலும், தற்போது, கோவையில் அதிகரித்துள்ள ரெஸ்டோ பார், பப்களிலும் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார்கள் எழுகின்றன. பல ரெஸ்டோ பார்கள், பப்களில் பெண்களுக்கு இலவசமாக மது அளிக்கின்றனர். இதனால், மது போதையில் இருக்கும் பெண்களை பாலியில் துன்புறுத்தல் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவநாதனிடம் கேட்டபோது, ''மாநகரில் விபச்சாரம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வேரோடு அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விபசாரம் நடைபெறும் இடங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது.



''மேலும் இதற்கு துணை போகும் போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளேன்.


''ஒரு சில இடங்களில் சிலர் பணம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் மூன்று போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர். இதேபோல் எந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபச்சாரம் நடக்கிறதோ அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Advertisement