தமிழகத்தில் பெண்கள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது: எச்.ராஜா

8



கோவை: “தமிழகத்தில் பெண்கள் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,” என தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது.

இதற்கு, கோவை மாவட்ட பா.ஜ., சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதில் பங்கேற்ற பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா அளித்த பேட்டி:



டில்லியில், 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 1993ல், 43 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. தற்போது அது, 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. இம்மாற்றத்திற்கு, பிரதமர் மோடியின் திட்டங்கள் மக்களிடம் சென்றது மட்டுமல்ல; ஆம் ஆத்மியின் ஊழலும் காரணம்.

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும்; இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், ஈரோட்டில் குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகளை, நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. இது, வரும் 2026ல் எதிரொலிக்கும்.


மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 6,680 கோடி ரூபாயும், பல்வேறு உள்கட்டமைப்புக்காக, 14,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வினர் இதை மறைத்துவிட்டு, மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர்.


திருப்பரங்குன்றம் மலையில் தல விருட்சத்தை மீட்க வேண்டும். கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். மருதமலையில், ஆசியாவின் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்படும் என, தெரிவித்திருப்பது வரவேற்புக்குரியது.



தமிழகத்தில் பெண்கள் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெண் ஏ.டி.ஜி.பி.,யாக இருக்கும் கல்பனா நாயக்கே, தன் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார். உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இதற்காக வெட்கப்பட வேண்டாமா?

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement