மேட்டூர் அணையில் கசிவுநீர் துளைகளை சுத்தப்படுத்தும் பணி

மேட்டூர்: மேட்டூர் அணை முன்புற தடுப்பு சுவரின் மொத்த நீளம், 5,300 அடி, உயரம், 214 அடி. அணை சுவரின் மேற்பகுதியில், 16 அடி அகல சாலை உள்ளது. அணை அடிப்பகுதியில், 4,400 அடி நீளம் கொண்ட கசிவுநீர் சுரங்கம் உள்ளது. அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள சுவர்களில், 154 துளைகள், அதன் எதிரே, 127 துளைகள் என, 281 கசிவு நீர் துளைகள்
உள்ளன.


அணையில் தேங்கி நிற்கும் தண்ணீர் அழுத்தத்தால், ஊடுருவும் நீர், கசிவுநீர் துளைகள் வழியே வெளியேறி சுரங்கத்துக்கு செல்லும். தொடர்ந்து சுரங்கத்தின் இரு பகுதிகளில் உள்ள சிறு கால்வாய் வழியே வெளியேறும். துளைகளில் வெளியேறும் தண்ணீர் அளவு, நீர்வளத்துறை சார்பில், தினமும் கணக்கீடு செய்து, அணை கட்டட ஸ்திரத்தன்மை கண்காணிக்கப்படும்.
கடந்த, 2005ல், துளைகளில் சுண்ணாம்பு படிமங்கள், படிப்படி-யாக படியத்தொடங்கின. அதற்கேற்ப துளைகளில் வெளியேறும் நீரின் அளவு குறைந்தது. இதனால், 20 ஆண்டுக்கு பின், கசிவு நீர் துளைகளில் படிந்த சுண்ணாம்பு படிமங்களை அகற்ற, நீர்வளத்-துறை முடிவு செய்தது. தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் கடந்த வாரம் இயந்திரம் மூலம் அகற்றும் பணி தொடங்கியது.
இதுவரை, 15 துளைகளில் படிமம் அகற்றப்பட்டுள்ளது. இப்-பணியை முடிக்க ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்-ளது.

Advertisement