மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850661.jpg?width=1000&height=625)
திருச்சி : ''பொதுமக்களின் மருந்து செலவை குறைக்கும் நோக்கத்தில், ஜெனரிக் மருந்துகள் விற்பனைக்காக முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகிறது,'' அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்டத்தில் உள்ள முதல்வர் மருந்தகம், அமராவதி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் அமைந்துள்ள மருத்துவக் கிடங்கு போன்றவற்றை ஆய்வு செய்தார்.
அதன் பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் அறிவித்தபடி, 1,000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் முதல்வரால் துவங்கி வைக்கப்பட உள்ளது.
அன்றாடம் பயன்படுத்தப்படும் 186 மருந்து பொருட்கள்,தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு, முதல்வர் மருந்தகம் மூலம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க, 300 தனி நபர்களும், கூட்டுறவு துறை சார்பில் 440 உரிமமும் பெற்றுள்ளனர். இதுவரை, 898 முதல்வர் மருந்தகம் திறக்க தயார் நிலையில் உள்ளன. சென்னையில், இம் மருந்தகத்தை முதல்வர் திறந்து வைத்த பின், மாநிலம் மற்றும் மாவட்ட கிடங்குகள் வாயிலாக, மருந்துகள் சப்ளை செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள மருந்தகங்களில் விற்பனை நடைபெறும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு காரீப் பருவத்தில் இதுவரை, 11.44 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில், 1.41 லட்சம் விவசாயிகளுக்கு, 2,489 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு, இன்னும் ஒரு சில நாட்களில் நிலுவைத் தொகை முழுமையாக பட்டுவாடா செய்யப்பட்டு விடும். கடந்த ஆண்டு இதே நேரத்தின் (8.1 மெட்ரிக் டன்) கொள்முதலோடு ஒப்பிடும் போது, இதுவரை 3.3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 380 குடோன்களில் 20.32 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமித்து வைக்கும் வசதி உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் புதிதாக 2,186 ரேஷன் கடைகள் துவங்கப்பட்டுள்ளன. இதுவரை, 37 ஆயிரம் ரேஷன் கடைகளில் 10,000 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2.25 கோடி ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், 17.44 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 2.4 லட்சம் பேர் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதில் 98 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளன.
ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக, 198 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 15.69 லட்சம் விவிவசாயிகளுக்கு, 14,141 கோடி வேளாண் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, 16,500 கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கால்நடை கடன், 2,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 4.06 லட்சம் விவசாயிகளுக்கு 2,426 கோடி வழங்கப்பட்டு உள்ளது. 45,047 சுய உதவி குழுக்களுக்கு 3,433 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.இது தவிர கூட்டுறவு சங்கங்களில், 23 வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிதியாண்டில், இது வரை 82 லட்சம் பேருக்கு 86,541 கோடிவழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை வாயிலாக, அம்மா மருந்தகம் உட்பட இரண்டு வகையான மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை இரண்டும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
மாதம் 2,000 ரூபாய் வரை, பொதுமக்களின் மருந்து செலவை குறைக்கும் நோக்கத்தில், ஜெனரிக் மருந்துகள் விற்பனைக்காக முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
![Kalyanaraman Kalyanaraman](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![VENKATASUBRAMANIAN VENKATASUBRAMANIAN](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![சம்பா சம்பா](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
டில்லியை அடுத்து மேற்கு வங்கம் தான்: மம்தாவுக்கு பா.ஜ., எச்சரிக்கை
-
' இது புது ஐடியாவா இருக்கே...' வழுக்கை தலையில் விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் நபர்
-
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி
-
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா: டிரம்ப் சொன்னது என்ன?
-
இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்
-
'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்