'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்
சென்னை : சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், காமிக் மற்றும் பாப் கலாசார ஆர்வலர்களுக்கான இரண்டு நாள் 'காமிக் - கான்' நிகழ்ச்சி நேற்று துவங்கியது. நாட்டின் முக்கிய இடங்களில் நடக்கும் இந்நிகழ்ச்சி, சென்னையில் இரண்டாவது முறையாக நடக்கிறது.
காமிக்ஸ், அனிமே, கேமிங், திரைப்பட சூப்பர் ஹீரோக்கள் போல் ஆடை அணிந்து, ஏராளமானோர் வலம் வந்தனர். உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமான காமிக் ரசிகர்கள் படையெடுத்தனர்.
இதில், 'இண்டஸ்வர்ஸ், பகாரமாக்ஸ், கார்பேஜ் பின்' உட்பட, ஏராளமான வெளிநாடு மற்றும் இந்திய நிறுவனங்களில் காமிக்ஸ் புத்தகம் அதிகம் இடம்பெற்றுள்ளன.
காமிக்ஸ் உலகின் முக்கியஸ்தர்களான, நியூயார்க் டைம்சின் காமிக் புத்தக எழுத்தாளர் மற்றும் விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் கைல் ஹிக்கின்ஸ், பிரேசிலிய கலைஞர் எட்வர்டோ பெரிகடோ மற்றும் ரேடியன்ட் பிளாக் காமிக் புத்தகத்தின் கலரிஸ்ட் மார்செலோ கோஸ்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன், கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதிய காமிக்ஸ் வருகை, காமிக்ஸ் உருவாக்கத்தில் உள்ள சிக்கல் உள்ளிட்டவை குறித்து, காமிக் ரசிகர்கள் கேட்டு அறிந்து கொண்டனர். காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு தேவையான ஆடைகள், தொப்பி, கீ செயின், பிரின்டிங் ஓவியங்கள் உள்ளிட்டவை, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.