இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற 8 சதவீத வளர்ச்சி வேண்டும்  பட்ஜெட் கலந்துரையாடலில் தகவல்

மதுரை: 'இந்தியா 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக மாற 8 சதவீத வளர்ச்சி வேண்டும்' என மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் நடந்த மத்திய பட்ஜெட் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையில் முதுகலை பொருளாதாரத் துறை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவர் முத்துராஜா நிகழ்வின் நோக்கம், முக்கியத்துவத்தை விளக்கினார்.

வேளாண் அனைத்து வர்த்தக சபைத் தலைவர் ரத்தினவேலு பேசுகையில், ''பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரித் தள்ளுபடி அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இல்லை. தனியார் முதலீடு பெருக்க வழி இல்லை.

நுகர்வு குறைந்துள்ளதால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் 6 கோடிக்கு மேல் உள்ளன. அவற்றின் மீது பட்ஜெட்டில் கவனம் இல்லை. 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாற வேண்டுமெனில் 8 சதவீத வளர்ச்சி வேண்டும்'' என்றார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ஜீனா ரீட்டா டேவிட் பேசுகையில், ''பெண்களுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக உள்ளது. பாலின ரீதியாக பட்ஜெட்டை அணுக ஆரம்பித்து 20 ஆண்டுகள் கடந்தும் முன்னேற்றம் இல்லை'' என்றார்.

மாணவர்கள் பட்ஜெட் குறித்த கேள்விகள், சந்தேகங்களை தெளிவுபடுத்தி தங்கள் எண்ணங்களை பகிர்ந்தனர். இளங்கலை பொருளாதார துறைத் தலைவர் கண்ணபிரான், பேராசிரியை ஷீலா, பொருளாதாரத் துறை, முதுகலை மேலாண்மைத் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement